தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“நிதியமைச்சரிடம் பதில் இல்லை, வெளிநடப்பு செய்தோம்”- எடப்பாடி பழனிசாமி - edappadi palanisamy speak about admk walkout reason

பட்ஜெட்டில் ஏழைகளுக்கான திட்டம் எதுவும் இல்லை.. நாங்கள் கேட்ட கேள்விக்கு நிதியமைச்சரிடம் பதிலும் இல்லை. ஆகையால் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம் என முன்னாள் முதல்-அமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

எங்களை அவமானப்படுத்தும் போது நாங்கள் அந்த அவையில் எப்படி அமர்ந்திருக்க முடியும் ? - எடப்பாடி சீற்றம்
எங்களை அவமானப்படுத்தும் போது நாங்கள் அந்த அவையில் எப்படி அமர்ந்திருக்க முடியும் ? - எடப்பாடி சீற்றம்

By

Published : Mar 24, 2022, 1:11 PM IST

சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகத்தில் பட்ஜெட் மீதான 4ஆம் நாள் விவாதம் இன்று (மார்ச் 24) நடைபெற்றுவருகிறது. இதில், 2022-23ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதி நிலை அறிக்கை ஆகியவற்றின் மீதான பொது விவாதத்திற்குப் பதிலுரை நடைபெறுகிறது.
இதனையடுத்து, நிதிநிலை அறிக்கையின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிலுரை வழங்க தொடங்கினார். அப்போது, அதிமுக சார்பாகச் சட்ட ஒழுங்கு பற்றிப் பேச வேண்டும் என நேரம் கேட்கப்பட்டது.

அதற்குச் சபாநாயகர் அப்பாவு, பதிலுரைக்கு அனுமதி கொடுக்கிறேன் எனத் தெரிவித்தார். பதிலுரை தொடர்பான கேள்விகளுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் கூறினார். மேலும் போதுமான அளவில் நேரம் வழங்கப்பட்டது. உங்கள் உறுப்பினர்கள் கேள்விகள் அனைத்திற்கும் பதில் அளிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

சட்டப்பேரவை பட்ஜெட் மீதான பொது விவாதத்திற்குப் பதிலுரை

மேலும், கேட்ட கேள்விக்கு முதலமைச்சர் பதில் சொன்னார். வேலூர், விருதுநகர் சம்பவம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார் எனவும் கூறினார். நேற்று ஒபிஎஸ் பேசும் போது நான் பேசி முடித்த பிறகு நாளை பதில் சொல்லுங்கள் என்று தான் சொன்னார். ஆனால் இன்று நீங்கள் பதில் கேட்காமல், சொல்லாமல் செல்கிறீர்கள் என வெளிநடப்பு செய்வது நியாயமா எனக் கேட்டார்.

இதனைத் தொடர்ந்து அதிமுக வெளிநடப்பு செய்தது. சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த பின்னோர் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, "ஓபிஎஸ் 10 ஆண்டுக் காலம் நிதி அமைச்சராக இருந்தவர். நிதிநிலை அறிக்கை குறித்து அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே அவமதிக்கும் வகையில் தற்போதைய நிதி அமைச்சர் அவையில் இருந்து வெளியேறிவிட்டார்.

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

பொது மக்களின் பிரச்சினைகளைச் சட்டப்பேரவையில் கொண்டு வரும்போது அதற்குப் பதில் சொல்ல வேண்டியதுதான் மரபு. பட்ஜெட்டில் ஏழைகளுக்கான திட்டம் எதுவும் இல்லை என்று சொன்னதற்குப் பதில் கூற முடியாமல் நிதியமைச்சர் வெளியேறினார். எங்களை அவமானப்படுத்தும் போது நாங்கள் அந்த அவையில் எப்படி அமர்ந்திருக்க முடியும்? ஆகவே வெளிநடப்பு செய்துள்ளோம் எனத் தெரிவித்தார்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் 2011 முதல் 2021 ஆண்டு வரை 1704 அறிவிப்புகளில் 26 திட்டங்கள் மட்டுமே கைவிடப்பட்டது. மொத்த அறிவிப்புகளில் 97 விழுக்காடு அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டது. கரோனா வைரஸ் தொற்று தீவிரமாக இருந்த காலகட்டத்தில் அரசு இயந்திரம் முடங்கியதால் சில திட்டங்களைச் செயல்படுத்த முடியாமல் போனது என்று தெரிவித்தார்.

சட்டப்பேரவை

மேலும், அதிமுக தேர்தல் அறிவிப்புகள் செயல்படுத்தப்படவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பேசுகிறார். உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் திமுக தான் வென்றது என்று மாயையை உருவாக்குகினார்கள். அனைத்து இடங்களிலும் முறைகேடுகளில் ஈடுபட்டு இந்த வெற்றியைப் பெற்று உள்ளனர்" என்று குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க:முதலமைச்சர் ஸ்டாலின் இன்று துபாய் பயணம்

ABOUT THE AUTHOR

...view details