சென்னை: எதிர்வரும் தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் அஇஅதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தும் பணிகளை அக்கட்சி மேற்கொண்டுவருகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அஇஅதிமுக தலைமைக் கழகம் தேர்தல் பணிகளை விரைவுப்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவையில் தேர்தல் கூட்டணியை இறுதிசெய்ய அதிமுக தீவிரம்காட்டும் நிலையில், தொகுதிப்பங்கீடு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அஇஅதிமுக, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை வேகமெடுத்துள்ளது.
பாமக, பாஜக ஆகிய கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு இறுதிசெய்யப்பட்ட நிலையில் தேமுதிக உடன் பேச்சுவார்த்தை தொடங்கப்படாமல் இருந்தது. இதன் காரணமாக தேமுதிக தரப்பு அதிருப்தியில் இருந்துவந்ததாக அறியமுடிகிறது. அத்துடன், கூட்டணிக்காக காத்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர்கள் இந்நிலையில், தேசிய முற்போக்கு திராவிடர் கழகத் தலைவர் விஜயகாந்தை அதிமுக அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, அஇஅதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் அவரது விருகம்பாக்கம் இல்லத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்தச் சந்திப்பின்போது, தொகுதிப்பங்கீடு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. தேமுதிகவுக்கு சுமார் 14 முதல் 17 சீட்டுகள் ஒதுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. விரைவில் தொகுதிப்பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:ஆர்.எஸ். பாரதிக்கு எதிரான வன்கொடுமை தடைச் சட்டத்தை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி!