சென்னையில் தடையை மீறி குட்கா விற்பனை செய்ய அமைச்சர்கள் உள்பட அரசு உயர் அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இந்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் முன்னாள் அமைச்சர்கள் ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் டி.ஜி.பி டி.கே ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், எஸ்.பி விமலா மற்றும் கலால் துறை, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இதையடுத்து வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து குட்கா குடோன் உரிமையாளர்கள் மாதவ ராவ், பங்குதாரர்கள் சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் செந்தில் முருகன், சிவக்குமார், மத்திய கலால் வரித் துறை அலுவலர் நவநீதகிருஷ்ண பாண்டியன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக அறியப்பட்டதை தொடர்ந்து மீண்டும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டன. அப்போது 246 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப்பட்டன. அமலாக்கத் துறையினர் முடக்கினர்.