சென்னை: அதிமுகவின் பொன் விழா மாநாடு வருகிற ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி மதுரையில் நடைபெறுகிறது. இது குறித்து அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், மதுரை பொன் விழா மாநாடு குறித்தும், எவ்வாறு நடத்துவது என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. மேலும், எடப்பாடி பழனிசாமி மதுரை மாநாட்டிற்கான இலச்சினையை வெளியிட்டார்.
பின்னர் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, “எம்ஜிஆர் தோற்றுவித்த அதிமுக ஆலமரம் போல் தழைத்து நிற்கிறது. அதிமுக வரலாற்றில் இன்றைய தினம் சரித்திரம் படைத்த நாளாக உள்ளது. 2018-ஆம் ஆண்டு உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட்டது. மீண்டும் 3 மாதத்திற்கு முன் உறுப்பினர் சேர்க்கை தொடங்கியது. இன்று அதிமுகவில் 1.60 கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இரண்டரை மாதத்தில் அதிக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்ட பெருமை அதிமுகவுக்கு உண்டு.
எங்களை வீழ்த்துவதற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இருக்கின்ற ஆட்சியாளர்கள் எத்தனையோ வித்தைகள் நிகழ்த்தினார்கள். ஆனால் அவை எல்லாம் தகர்க்கப்பட்டன. ஆனால், இன்று தமிழகத்தில் அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சியாக அதிமுக உள்ளது. சிலர் திமுகவிற்கு பி-டீமாக செயல்பட்டு எங்களை உடைக்க நினைத்தார்கள். அவர்களுக்கு உறுப்பினர் சேர்க்கை மூலமாக பதில் சொல்லியுள்ளோம். அடுத்து வரும் தேர்தலுக்கு வீர வரலாற்று மாநாடு அடித்தளமாக அமையும்" என கூறினார்.
இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, “காவிரி விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை கூறியுள்ளது. அதன் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. தற்போது மாநிலங்களுக்கு இடையே உள்ள உறவை சீர்குலைக்கும் வகையில் கர்நாடகா மாநில துணை முதலமைச்சர் பேசி வருகிறார்.
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அதிமுக தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தினோம். இப்போது காங்கிரஸ் - திமுக இணைந்து இருக்கின்றன. இந்தியா முழுவதையும் ஓருங்கிணைப்பேன் என்று கூறுகின்ற முதல்வர் ஏன் அவர்களிடம் பேசி ஜூன் மாதத்திற்கான தண்ணீரை பெறவில்லை.