சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக உயர்மட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கே.பி. முனுசாமி, வைத்தியலிங்கம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஆலோசனையில் பங்கேற்றனர். இதில், தமிழ்நாட்டில் பாஜக தலைமையில் கூட்டணி என்று தேசியத் தலைவர் நட்டா அறிவித்தாரா? அல்லது முருகன் அறிவித்தாரா? அறிவிக்க வி.பி.துரைசாமி யார்? அவருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதா? என கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த மக்களவைத் தேர்தலில், திமுக தலைமையில் ஒரு கூட்டணியாகவும், அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் ஒரு கூட்டணியாகவும் போட்டியிட்டன. அப்போதே பாஜக தலைமையில் கூட்டணி என்கிற பிரச்னை எழுந்து பின்னர் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமி தற்போது பாஜக துணைத் தலைவராக உள்ளார்.
அவர் நேற்று (ஆக.12) அளித்த பேட்டியில், “இனி தமிழ்நாட்டில் பாஜக தலைமையில்தான் கூட்டணி. இனி திமுக - பாஜகவுக்குத்தான் போட்டியே, நாங்கள் வலுவடைந்து வருகிறோம்” எனத் தெரிவித்தார். இது அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை எழுப்பியது. இதுகுறித்து பாஜக தலைமை மறுப்பு தெரிவிக்காத நிலையில், அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இன்று (ஆக.13) அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முடிந்தவுடன் அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பாஜக தலைமையில் கூட்டணி குறித்த கேள்விக்கும், அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் குறித்த கேள்விக்கும் பதிலளித்த அவர், ''தேர்தல் பணியைப் பற்றி ஆலோசிக்க இன்றைய கூட்டம் கூட்டப்பட்டது. முதலமைச்சர் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்.