இனிவரும் காலங்களில் கட்டளையை மீறி கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்து விமர்சிப்போர் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவர் என அதிமுக தலைமை தெரிவித்துள்ளது. மேலும் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், 'அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு மாறாகவும், இயக்கத்தின் லட்சியங்களுக்கு விரோதமாகவும் செயல்படுபவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். எண்ணிலடங்கா கொள்கை வீரர்களின் ரத்தம் சிந்திய தியாகத்தாலும், வியர்வை சிந்திய உழைப்பாலும் உருவான இயக்கம், அதிமுக.
தமிழ் மக்களின் உயர்வும், தமிழ்நாட்டின் வளர்ச்சியும், சமத்துவ, சகோதர சமூகத்தினைப் படைக்கும் உன்னத நோக்கமும்தான், நம் இயக்கத்தின் இலக்குகள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள்தான் நேற்றும், இன்றும், நாளையும் நமக்குத் தலைவர்கள். அதிமுகவில் தனி மனித துதிபாடல்களுக்கோ, தங்கள் ஆசைக்கும், தேவைக்கும் கழகத்தைப் பயன்படுத்தும் செயல்களுக்கோ சிறிதும் இடமில்லை.
எங்களது பெயர்களைப் பயன்படுத்திக்கொண்டு தங்களை முன்னிலைப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவோரின் நடவடிக்கைகளை நாங்கள் ஒருபோதும் ரசித்ததில்லை. மாறாக அச்செயல்களால் நாங்கள் வருத்தப்படுகிறோம், வேதனைப்படுகிறோம். அதிமுகவிற்கு உழைக்க விரும்புவோர், மக்கள் தொண்டில் கவனம் செலுத்துங்கள். அரசியலில் ஆர்வம் கொண்டு மேலெழுந்து வர விரும்புவோர் அறிவிலும், ஆற்றலிலும் அக்கறை கொண்டு உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.