தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீரன் அழகுமுத்துக்கோன் பெயரை சுதந்திர தின உரையில் ஏன் குறிப்பிடவில்லை - அதிமுக கேள்வி - etv bharat

சுதந்திரத் தின உரையில் வீரன் அழகுமுத்துக்கோன் பெயரை தவிர்த்து மற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களை குறிப்பிடுவதா? என முதலமைச்சருக்கு அதிமுக தலைமைக் கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அதிமுக தலைமைக் கழகம் எதிர்ப்பு
அதிமுக தலைமைக் கழகம் எதிர்ப்பு

By

Published : Aug 18, 2021, 5:49 PM IST

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நமது தேசம் சுதந்திரம் பெறுவதற்கு பெரும் பங்கு ஆற்றியவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள். அவர்களின் வீரமும், தீரமும், துணிவும், கொடையும் அளப்பரியது. அவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் அனைவருக்கும் மணிமண்டபங்களும், சிலைகளும் அமைத்து நினைவு கூறும் வகையில் அரசு விழாவும் எடுக்கப்படுகிறது. அதில், பெரும்பான்மையான பங்கு அதிமுகவும், அதன் தலைவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கும் உண்டு.

நினைவு கூர்ந்து பேசுவது வழக்கம்

மேலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவில் கோட்டைக் கொத்தளத்தில் மூவர்ணக் கொடி ஏற்றி சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூறும் விதமாகவும், அவர்கள் தம் தியாகத்தைப் போற்றும் விதமாகவும் அனைவரின் திருப்பெயரையும் சுதந்திர தின உரையில் நினைவு கூர்ந்து பேசுவது வழக்கம்.

அழகுமுத்துக்கோன் பெயர் தவிர்ப்பு

ஆனால், நடந்து முடிந்த சுதந்திர தின விழாவில் முதலமைச்சர், அவர்தம் சுதந்திர தின உரையில் வீரன் அழகுமுத்துக்கோன் பெயரை தவிர்த்து, மற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களை மட்டும் நினைவு கூர்ந்து பேசியது மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

முழு உருவ வெண்கலச் சிலை

1991-1996 ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் மாவீரர் அழகுமுத்துக்கோனுக்கு சென்னை எழும்பூரில் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட்டதோடு, தூத்துக்குடி மாவட்டத்தில் வீரன் அழகுமுத்துக்கோனுக்கு ரூ.38.50 லட்சம் செலவில் மணிமண்டபம் அமைக்கப்பட்டு 2004 டிசம்பர் 8 ஆம் தேதி திறந்துவைக்கப்பட்டது. மேலும், வீரன் அழகுமுத்துக்கோன் பெயரில் அரசு போக்குவரத்துக் கழகமும் உருவாக்கப்பட்டு அவருக்கு மேலும் சிறப்பு சேர்க்கப்பட்டது. அதேபோல், அவர்தம் பிறந்த நாளான ஜூலை 11-ஆம் நாளன்று ஒவ்வொரு ஆண்டும் அவரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து அரசு விழாவாகக் கொண்டாடுவதற்கு மறைந்த ஜெயலலிதா அரசால் அறிவிக்கப்பட்டது. இத்தகைய போற்றுதலுக்குரியவரின் பெயரை இந்த சுதந்திர தினப் பொன் விழா ஆண்டில் நினைவு கூறாமல் சுதந்திர தின உரை நிகழ்த்தியது வருத்தம் அளிக்கிறது.

புகழைப் பேண வேண்டும்

சாதி, மத பேதமற்ற அரசைத் தான் பெரும்பான்மையான மக்கள் விரும்புவார்கள்.
அதன் அடிப்படையில் இது போன்ற தவறுகள் இனி வரும் காலங்களில் நிகழா வண்ணம், அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களையும், எம்.ஜி.ஆர் வழியிலும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வழியிலும் நினைவு கூர்ந்து, ஒரே ரீதியான மரியாதையையும், கௌரவத்தையும் வழங்கி அவர்கள் தம் புகழைப் பேண வேண்டும்" என கூறியுள்ளனர்.

இதையும் படிங்க:கொடநாடு கொலை வழக்கில் என்னையும் சேர்க்க திமுக அரசு சதி - இபிஎஸ்

ABOUT THE AUTHOR

...view details