தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"மக்களை பற்றி நினைக்காமல் தேர்தலை பற்றி நினைக்கும் திமுக அரசு" - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்! - திராவிட மாடல்

2024 நாடாளுமன்றப் பொதுத்தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பதைப் பற்றியே சிந்திக்கும் திமுக அரசுக்கு, தமிழக மக்களைப் பற்றி சிந்திக்க நேரம் இருக்காது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Edappadi Palanisami
எடப்பாடி பழனிச்சாமி

By

Published : Jun 12, 2023, 6:09 PM IST

சென்னை:அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சேலத்தில் மக்கள் நலத் திட்டங்களை நேற்று (ஜூன் 11) திறந்து வைத்துப் பேசும்போது நிர்வாகத் திறமையற்ற முதலமைச்சர், மக்கள் பணி செய்யவே நேரம் போதவில்லை என்றும் மக்கள் விரோதிகளைப் பற்றி பேச ஏது நேரம் என்றும் தனது திருவாயை மலர்ந்திருக்கிறார். யார் தமிழ் நாட்டிற்கு துரோகம் செய்தவர்கள் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். மக்கள் நலனைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், குடும்ப நலனை மட்டுமே மையப்படுத்தி ஆட்சி செய்பவர்கள் யார் ?, தலைமைப் பொறுப்பில் அப்பா, மகன் பேரன் இவர்களுக்குப் பிறகு கொள்ளுப் பேரனுக்கு மகுடம் என்று வாரிசு அரசியல் செய்பவர்கள் யார்?

இவர்களுக்கு சளைத்தவர்கள் நாங்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், மாவட்டந்தோறும் அப்பா, பிறகு மகன் என்று தேர்தலில் நின்ற திமுக-வின் மாவட்டக் குறுந்தலைவர்கள் யார்? வாழையடி வாழையாக திமுக என்ற நிறுவனத்தை நாங்கள்தான் நடத்துவோம், தொண்டர்கள் என்பவர்கள் எல்லாம் பல்லக்கு தூக்கிகள்தான் என்று கொக்கரிக்கும் மனோபாவம் கொண்ட, மன்னர் பரம்பரையைத் தோற்கடிக்கும் விடியா திமுக-அரசின் சர்வாதிகார மனோபாவத்தை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

அதுமட்டுமல்ல, திமுக தோழமைக் கட்சிகளுக்கு செய்யும் துரோகத்தை, திமுக-வின் கட்சிப் பத்திரிக்கையில் கூட்டணிக் கட்சியினரை படுகேவலமாகத் தாக்கி எழுதுவதன் மூலமும், திமுக நிர்வாகிகள் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தர்மத்தின்படி தோழமைக் கட்சிகளுக்கு அரசுப் பதவிகளை (தலைவர், துணைத் தலைவர்) வழங்காமல் பட்டை நாமம் போட்டதையும், அனைவரும் நன்கு அறிவார்கள்.நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து, பின் புறவாசல் வழியே தப்பித்தோம், பிழைத்தோம் என்று மெகா கூட்டணி அமைத்து, தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த திமுக, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், ஜெயலலிதாவின் அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு திறப்பு விழா கண்டு கொண்டிருக்கின்றது.

அதிமுக ஆட்சியில் எந்தத் திட்டமும் கொண்டு வரவில்லை என்று சொன்ன விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுக அரசால் கட்டப்பட்ட சேலம் மாநகர் பேருந்து நிலையத்திற்கு தனது தந்தை பெயரைச் சூட்டி மகிழ்ந்துள்ளார். நேற்று சேலத்தில் திறக்கப்பட்ட மாநகரப் பேருந்து நிலையம், நேரு கலையரங்கம், வ.உ.சி. மார்க்கெட், பெரியார் பேரங்காடி, போஸ் மைதான வணிக வளாகம், ஆனந்தா அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் போன்றவை அதிமுக ஆட்சிக்காலத்தில் பணிகள் தொடங்கியது.

மேலும், ஜெயலலிதாவின் அரசால் தலைவாசலில் துவக்கப்பட்ட, ஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடைப் பண்ணையை தமிழ் நாட்டிலேயே மிகச் சிறியதாக மாற்றிய பெருமையும், ஏற்காடு கூட்டுறவு அதிகாரிகளுக்கான பயிற்சி நிறுவனத்தை மூடிய பெருமையும், மேட்டூர் அணை நிரம்பி கடலிலே வீணாகக் கலக்கும் வெள்ள உபரி நீரை, நீரேற்று பாசனத் திட்டம் மூலம் சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட 100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தை முடிக்காமல் கிணற்றில் போட்ட கல்லாக மாற்றிய பெருமையும், தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற அம்மா மினி கிளினிக்குகளுக்கு மூடுவிழா நடத்தியதும் இந்த நிர்வாகத் திறனற்ற முதலமைச்சரையே சாரும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சேலம் மாவட்டத்திற்கு என்று புதிதாக எந்த பெரிய திட்டத்தையும் கொண்டுவராத திமுக அரசு, மக்கள் பணி செய்யவே நேரமில்லை என்று திருவாய் மலர்ந்திருப்பது மிகவும் கண்டனத்திற்கு உரியது. பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக, தமிழகத்தை அதிக நாட்கள் ஆண்ட கட்சி என்ற முறையில் ஆளும் கட்சியின் திறமையின்மையை, தோல்விகளை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உண்டு.

எனது தலைமையிலான ஜெயலலிதாவின் அரசால் கொண்டுவரப்பட்டு இரண்டு வருடகால தாமதத்திற்குப் பிறகு, திறப்பு விழா நடத்தியுள்ள திட்டங்களை, ஏதோ தான் கொண்டுவந்ததுபோல் ஸ்டிக்கர் ஒட்டி நாடகமாடி, ஊரில் கல்யாணம், மார்பில் சந்தனம் என்ற ரீதியில் நகர்வலம் வருகிறார்.

துப்புரவுத் தொழிலாளர்கள், முதல் அரசு ஊழியர்கள் வரை சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் இந்த அரசைக் கண்டித்து வீதிகளில் இறங்கி போராடி வருகின்றார்கள். தமிழக மக்கள் அனைவரும் திருப்தியாக இருப்பதாக நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் கனவுலகில் மிதக்கிறார்.

தமிழகத்தில் சொத்துவரி உயர்வு, மின்சார கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, கட்டுமான பொருட்கள் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, கஞ்சா மற்றும் போதைப் பொருட்களின் கேந்திரமாக தமிழகம் மாறிய அவல நிலை மற்றும் போதைப் பொருட்களினால் தமிழக இளைஞர்கள் கெட்டு சீரழியும் நிலை, அதிகரித்த வழிப்பறி, நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

மேலும், பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்தல், தனியாக வசிக்கும் வயதானவர்கள் குறிவைத்து தாக்கப்படுதல், திமுக-வினரால் அதிகாரிகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் மிரட்டப்படுதல், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத் துறையினர் திட்டமிட்டு மிரட்டப்படுதல், மணல் கொள்ளை போன்ற சட்ட விரோதச் செயல்களை வெளிக் கொண்டுவரும் உண்மையான சமூக சேவகர்கள் மீது கொலை வெறி தாக்குதல், டாஸ்மாக் ஊழல், உள்ளாட்சி ஊழல் என்று அனைத்துத் துறைகளிலும் கட்டுக்கடங்கா ஊழல்.

மீண்டும் மின்வெட்டு, முதலமைச்சர் வெளிநாடு சுற்றுலா பயணம் சென்று முதலீட்டை ஈர்க்கையில், தமிழகத்தில் உள்ள தொழில் துறையினர் குஜராத், கர்நாடகா, உத்திரப் பிரதேசம், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் முதலீடு செய்தல் என்று தமிழக மக்களுக்கு இந்த ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நிகழ்ந்த தீயவைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

கொங்கு மண்டல மக்களின் நூற்றாண்டு கனவான அத்திக்கடவு திட்டம் 85 சதவீத பணிகள் அதிமுக அரசில் முடிவடைந்திருந்த நிலையில், விடியா அரசு ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் இழுத்துக் கொண்டே செல்வதை மக்கள் நன்கு அறிவார்கள்.

அதேபோல், சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் திட்டத்தைக் கொண்டு வந்தது அதிமுக அரசு என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு 'மே' மாத ஊதியம் வழங்கப்படாது என்ற அரசின் அறிவிப்பு, பள்ளி ஆசிரியர்கள் மீது இவர்கள் கொண்டுள்ள உண்மையான அக்கறையை வெளிக் காட்டியுள்ளது.

இன்று (ஜூன் 12) குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம். ஆனால், அரசுத் துறையான ஆவினில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று ஆதாரத்துடன் கூறிய செய்தி ஊடகத்தை அரசு கேபிள் டி.வி-யில் இருந்து மறைத்துள்ளது, பொய் பத்திரிக்கை சுதந்திரம் பேசும் திராவிட மாடல் விடியா திமுக அரசு.

66-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக தமிழகத்தின் சார்பாக தேர்வான 247 மாணவர்களில், ஒரு மாணவரைக் கூட அனுப்பாமல், விளையாட்டில் சாதிக்க நினைக்கும் மாணவர்களின் கனவை சூனியமாக்கியதுடன், மருத்துவர், பொறியாளர் மற்றும் வேளாண் போன்ற படிப்புகளில் சேர்வதற்காகக் காத்திருந்த விளையாட்டு மாணவர்களின் எதிர்கால வாழ்விற்கு மூடுவிழா கண்ட நிர்வாகத் திறனற்ற திராவிட மாடல் அரசு.

பட்டத்து இளவரசர், விளையாட்டுத் துறை அமைச்சர் மற்றும் அவரது நெருங்கிய சகா பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆகிய இருவரும் அதிகாரிகள் மீது பழிபோட்டு தப்பித்தாலும், தமிழக மக்கள் இவர்களுக்கு சரியான பதிலை நாடாளுமன்றத் தேர்தலில் அளிப்பார்கள். கொதிப்படைந்த தமிழக மக்கள் விழிப்படைந்துவிட்டார்கள்.

ஓராண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தோல்வி உறுதி என்பதை அறிந்த நிலையில், கடந்த 18 மாதங்களுக்கும் மேலாக இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சிகளோடும் மெகா கூட்டணி அமைத்து 2024 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை எதிர்கொள்வது பற்றியே சிந்திக்கும் விடியா அரசின் முதலமைச்சருக்கு தமிழக மக்களைப் பற்றி சிந்திக்க நேரமேது? மீதமுள்ள 35 மாத காலத்தையும், பொய்யையும், புனை சுருட்டையும் மூலதனமாகக் கொண்டு அப்பாவி தமிழக மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி, ஆட்சி அதிகாரத்தில் தொடரலாம் என்ற இருமாப்பில் இருக்கும் திராவிட மாடல் ஆட்சியாளர்களுக்கு மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:சுயநலத்துக்காக அழகிரியை ஏமாற்றியவர் ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

ABOUT THE AUTHOR

...view details