சென்னை:அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெ.ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, கட்சியின் பொதுச்செயலாளராக அவரது தோழி வி.கே.சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் பொதுக்குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்பின்னர் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் கடந்த 2017-ஆம் ஆண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தன்னை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிராகரிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சசிகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, தன்னை இடைக்கால பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது சட்டவிரோதமானது என தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள், இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவி அதிமுகவில் இருக்கிறதா? அதற்கு விதிகள் இருக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சசிகலா தரப்பு வழக்கறிஞர், ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு கட்சி தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதால் இடைக்கால பொதுச்செயலாளர் நியமிக்கப்பட்டதாகவும், எம்.ஜி.ஆர். இறந்த போது கூட இதேபோன்ற இடைக்கால ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், அதற்கு பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளதாகவும், கட்சியில் இருந்து என்னை நீக்கவோ? கட்சி விதிகளில் மாற்றம் செய்யவோ? அவர்களுக்கு அதிகாரமில்லை எனத் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், ஒருவேளை நீங்கள் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதே செல்லாது என்றால் நீங்கள் எப்படி மனு தாக்கல் செய்ய முடியும்? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சசிகலா தரப்பு வழக்கறிஞர், பொதுக்குழு மூலம் உறுப்பினர்கள் தான் தம்மை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்ததாகவும், பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கும் வரை தன்னை இடைக்கால பொதுச்செயலாளராக மதுசூதனன், ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிடோர் முன்மொழிந்து, மற்ற பொதுக்குழு உறுப்பினர்கள் வழிமொழிந்து நிலையில், தன்னை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதன் மூலம் அடிப்படை அமைப்பு மாற்றப்பட்டுள்ளதாக வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அடிப்படை அமைப்பு மாற்றப்பட்டதாக கூறுவதற்கு இது ஒன்றும் அரசியல் சாசனம் இல்லையே? என்றும், அதிமுகவில் நீங்கள் அடிப்படை உறுப்பினரா? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு, தான் நீண்ட காலமாக அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் என சசிகலா தரப்பில் பதிலளிக்கப்பட்டது.