தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல்- நடவடிக்கைக்கு காரணம் என்ன? - அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைப்பு

ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் மோதலை தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அலுவலர்கள் சீல் வைத்தனர்.

அதிமுக தலைமை அலுவலகம்
அதிமுக தலைமை அலுவலகம்

By

Published : Jul 11, 2022, 2:52 PM IST

Updated : Jul 11, 2022, 3:43 PM IST

சென்னை:அதிமுக பொதுக்குழு நடத்த உயர்நீதிமன்றம் இன்று (ஜூலை 11) அனுமதி அளித்த நிலையில், சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் காலை 9.15 மணிக்கு பொதுக்குழு தொடங்கி நடைபெற்றது. இந்தநிலையில், பொதுக்குழுவைப் புறக்கணித்து ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றார்.

அங்கு பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவரை உள்ளே அழைத்து சென்றனர். அப்போது, அங்கிருந்த ஓபிஎஸ் , ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மோதிக் கொண்டனர். பேனர்களை கிழித்தும், கற்களை வீசியும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதில், பாதுகாப்பு பணியிலிருந்த இரண்டு காவல்துறையினர்,11 பேர் காயம் அடைந்தனர்.

மேலும் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5க்கும் மேற்பட்ட கார்கள், இரண்டு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

இதையடுத்து, தலைமை அலுவலகம் சார்பில் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மோதல் தொடர்பாக சட்டவிரோதமாக கூடுதல், கலவரத்தில் ஈடுபடுதல், பயங்கர ஆயுதங்களோடு தாக்குதல், சிறை வைத்தல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து காவல்துறை உயர் அலுவலர்கள் வருவாய் கோட்டாட்சியர் சாய் வர்தினியிடம் ஆலோசனை மேற்கொண்டனர். இதையடுத்து, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 145, 146 படி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைப்பதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டு, வருவாய்த்துறை அலுவலர்களால் சீல் வைக்கப்பட்டது.

சீல் வைப்பதற்கு முன்னதாக, ஓபிஎஸ் அலுவலகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். அலுவலகத்திலிருந்து வெளியே வந்த ஓபிஎஸ், தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். இதையடுத்து, அதிமுக அலுவலக கதவு, நுழைவு வாயிலை வருவாய்த்துறை அலுவலர்கள் பூட்டி சீல் வைத்தனர்.

இதையும் படிங்க: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமனம்!

Last Updated : Jul 11, 2022, 3:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details