சென்னை:ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்த போது, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தின் முன், எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் தரப்பில் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கு விசாரணையின் போது, தலைமை அலுவலகம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக எந்த நீதிமன்றங்களிலும் வழக்கு நிலுவையில் இல்லை, வழக்கு நிலுவையில் இருந்தாலும் சீல் வைக்க முடியாது, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதால் மட்டுமே சீல் வைக்கப்பட்டது எனவும் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், தற்போது இரு தரப்பினருக்கும் இடையில் சமாதானம் ஏற்படவில்லை எனவும், மீண்டும் பிரச்சனை ஏற்படாது என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை என்பதால் பொது அமைதி, பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு கருதி சீல் வைத்த உத்தரவை ரத்து செய்யக் கூடாது என்றும், சிவில் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் குறிப்பிட்டார்.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் , கட்சி அலுவலகம் பன்னீர் செல்வத்திற்கு சொந்தமானதாக இருந்தால் அவர் ஏன் அலுவலக கதவை உடைத்து கோப்புகளை எடுத்து செல்ல வேண்டும்? சம்பவம் நடந்த தேதியில் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்பதை பன்னீர் செல்வம் தனது மனுவில் ஒப்புக் கொண்டுள்ளார் என குறிப்பிட்டார்.