சென்னை: அதிமுக சார்பில் அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் ஆர்.எம். பாபு முருகவேல், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, இந்தியத் தலைமை நீதிபதி, குடியரசுத்தலைவர், மத்திய புலனாய்வுத் துறை இயக்குநர் ஆகியோருக்கு அதிமுக சார்பில் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், "சமீபகாலமாக தமிழ்நாட்டில் ஒரு அசாதாரண சூழல் நிலவி வருகிறது. காவல் கைதிகளின் சந்தேக மரணங்கள் (லாக்கப் டெத்), அரசு உயர் அலுவலர்கள் தற்கொலைகள், வன்முறை வெறியாட்டங்கள் போன்றவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு அரசு காவல்துறையை சுதந்திரமாகச் செயல்படவிடாமல், நல்ல திறமையான நேர்மையான அதிகாரிகளை இயல்பாக செயல்பட விடாமல், லஞ்ச ஒழிப்புத் துறையை தன் பணியாளாகக் கருதி தங்களுடைய எண்ணங்களை நிறைவேற்றுகின்ற வகையில் செயல்படக்கூடிய ஒரு துறையாக மாற்றியிருக்கிறது.
அரசியல் காழ்ப்புணர்ச்சி
அரசியல் பழிவாங்கும் நோக்கோடு முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மட்டுமின்றி அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களின் மீதும், உறவினர்களின் மீதும் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகச் சோதனை என்ற பெயரில் லஞ்ச ஒழிப்புத் துறையை ஒரு கருவியாகப் பயன்படுத்தி கொண்டிருக்கிறது.
முன்னாள் வனத்துறை தலைமை அலுவலர் வெங்கடாசலம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக பணியிலிருந்த போது அரசின் அழுத்தம் காரணமாகவும், அவரை பதவி விலகச் சொன்னதின் காரணமாகவும், லஞ்ச ஒழிப்புத் துறையைத் தவறாகப் பயன்படுத்தி அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, மன உளைச்சலுக்கு ஆளாக்கி, தற்கொலைக்குத் தூண்டியதால் தற்கொலை செய்து கொண்டார்.