சென்னை:அதிமுகவின் உச்சபட்ச அதிகாரமாக பொதுச்செயலாளர் பதவி உள்ளது. ஏற்கனவே எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற பெரும் தலைவர்கள் அதிமுகவின் பொதுச்செயலாளர் இருந்தனர். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பொதுச்செயலாளர் பதவி இல்லாமல் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ் செயல்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் ஒற்றை தலைமை பிரச்சனை காரணமாக மீண்டும் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி நீக்கப்பட்டு இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார்.
எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு செல்லாது என அறிவிக்க கோரி ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கில் ஒரு நீதிபதி கொண்ட அமர்வு பொதுக்குழு செல்லாது என்றும், இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு பொதுக்குழு செல்லும் என்றும் தீர்ப்பு வழங்கியது.
இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த மாதம் 23ஆம் தேதி மேல்முறையீட்டு வழக்கில் பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. மேலும் பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் மனு அளித்துக் கொள்ளும்படி உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
உச்சநீதிமன்றத்தின் இடையீட்டு மனு மூலம் இரட்டை இலையை பெற்ற ஈபிஎஸ் தரப்பினர் உற்சாகமாக இடைத்தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டனர். இடைத்தேர்தலில் வெற்றிபெற்று தலைமையை நிரூபிக்கும் நோக்கத்தில் களம் கண்ட ஈபிஎஸ் தரப்பினருக்கு தோல்வி மட்டுமே மிஞ்சியது.