சென்னை:2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒராண்டு மட்டுமே உள்ள நிலையில் அதிமுகவிற்கும், பாஜகவிற்கும் இடையில் கருத்து மோதல்கள் வெடித்து கொண்டே வருகிறது. பாஜகவின் மாநில நிர்வாகியாக இருந்த நிர்மல்குமார் அதிமுகவில் இணைந்த போது அதிமுக - பாஜக என இரண்டு கட்சியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட தலைவர்களிடம் கருத்து மோதல் ஏற்பட்டது.
அதிமுக-பாஜக கூட்டணி தொடர்கிறது என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதால் அது சற்று தனிந்தது. அதிமுகவுடனான கூட்டணியை முடித்து கொண்டு தனியாக பாஜக தலைமையில் ஒரு கூட்டணி அமைக்க வேண்டும் என்று அண்ணாமலை தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி திமுகவின் உள்ள முக்கிய பிரமுகர்களின் சொத்துப் பட்டியலை அண்ணாமலை வெளியிட்டிருந்தார். ஆனால் அதில் திமுக தலைவர்களை கடந்து அதிமுகவில் உள்ள தலைவர்கள் எதிர்வினையாற்ற தொடங்கியுள்ளனர். இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட தலைவர்கள் பேசுவது பெரிதாக எடுத்துக் கொள்ளப்படாது.
ஆனால் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "தன்னை முன்னிலை படுத்திக்கொள்ள நினைக்கும் அண்ணாமலை குறித்து இனி என்னிடம் கேள்வி கேட்காதீர்கள்" என அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்தார். முதல் முறையாக அண்ணாமலையை எடப்பாடி பழனிசாமி கடுமையாக தாக்கியுள்ளார். இதன் மூலம் அண்ணாமலை வேறு, பாஜக வேறு என்ற கோணத்தில் அதிமுக தலைவர்கள் அண்ணாமலையை விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால் அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா என்று கேள்வி எழுந்துள்ளது.