டெல்லி: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், ‘சென்னையில் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது. அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும்’ என்று கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி தீா்ப்பளித்தாா்.
இதனை எதிர்த்து அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலளர் எடப்பாடி கே.பழனிசாமி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இதற்கு கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதனையடுத்து ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரியும், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனவும் ஓபிஎஸ் தரப்பில் கூறப்பட்டது. முன்னதாக ஈபிஎஸ் தரப்பில் புதிய இடைக்கால மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து வழக்கு கடந்த டிச.15ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைக்கு பிறகு ஜன.4ஆம் தேதி விசாரணை செய்யப்படும் என உத்தரவிட்டனர். அதன்படி இந்த வழக்கு இன்று (ஜன.4) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இதையும் படிங்க:‘சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்’ - தமிழ்நாடு டிஜிபி