தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக பொதுக்குழு கூட்டம்; சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு - ADMK general body meeting

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் பென்ஜமின் அளித்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும் படி காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

அதிமுக பொதுக்குழு கூட்டம்; காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
அதிமுக பொதுக்குழு கூட்டம்; காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

By

Published : Jun 21, 2022, 4:08 PM IST

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களாக 2,500 பேர் கலந்து கொள்ள உள்ளதால் பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு வழங்க காவல் துறைக்கு உத்தரவிடக்கோரி முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளருமான பென்ஜமின் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், 'போலீஸ் பாதுகாப்பு கேட்டு மூன்று முறை மனு அளித்தும், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாததால், பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்குமாறு டி.ஜி.பி., ஆவடி காவல் ஆணையர் மற்றும் திருவேற்காடு காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட' வேண்டுமென தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, பொதுக்குழு கூட்டம் தொடர்பாக கேட்ட 26 கேள்விகளுக்கு இதுவரை அதிமுக தரப்பில் பதில் வரவில்லை எனத் தெரிவித்தார். மேலும், பொதுக்குழு தொடர்பாக ஏதும் பிரச்னை எனத் தெரிந்தால் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் காவல் துறையை நாடலாம் எனவும் தெரிவித்தார்.

ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், பொதுக்குழுவை கூட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கே அதிகாரம் உள்ளதால், அழைப்பாளராக கலந்து கொள்ள இருக்கும் பென்ஜமின் இந்த வழக்கை தொடர அதிகாரம் இல்லை என்பதால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.

அப்போது, பென்ஜமின் பொதுக்குழு உறுப்பினர் இல்லையா? என நீதிபதி கேள்வி எழுப்பியதற்கு பொதுக்குழு உறுப்பினராக இருந்தாலும் பாதுகாப்பு வழங்கக்கோரி வழக்குத் தொடர முடியாது என ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், பொதுக்குழு கூடுவதில் உள்ள பிரச்னைகள் குறித்து காவல் துறையிடம் மனு அளிக்கப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பென்ஜமின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், பொதுக்குழு கூட்டத்திற்கு வரும் 2,600 பேருக்கும் அடையாள அட்டை மற்றும் வாகனங்களுக்கான பாஸ் வழங்கப்படும் எனத் தெரிவித்தார். இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி, காவல் துறையின் கேள்விகளுக்கு அதிமுக இன்றைக்குள் பதிலளிக்க உத்தரவிட்டார்.

மேலும், பொதுக்குழு அட்டவணை, ஓபிஎஸ் அளிக்கும் மனு என அனைத்தையும் ஆராய்ந்து முடிவெடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, எம்.பி., எம்.எல்.ஏ. என யாராக இருந்தாலும் உரிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி, அனைத்து தரப்புக்கும் தகுந்த பாதுகாப்பு அளித்து சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும் என காவல் துறைக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: நெருங்கும் அதிமுக பொதுக்குழு : எடப்பாடி பழனிசாமிக்கு பெருகும் ஆதரவு...

ABOUT THE AUTHOR

...view details