சென்னை:அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக்கூட்டம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், ஜெயக்குமார், மூத்த கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக மண்டபத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மாறிமாறி முழக்கங்களை எழுப்பினர். திருமண மண்டபம் வந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதனால் அந்தப் பகுதியில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது. ஓ.பன்னீர் செல்வத்தை வெளியேறச்சொல்லி பழனிசாமி ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர்.
ஒற்றைத்தலைமை முழக்கம்: மேலும் ஓ.பன்னீர்செல்வம் மேடையில் இருக்கும்போதே, அவர் முன்னிலையில் ஒற்றைத்தலைமை வேண்டும் என முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொண்டர்களில் சிலர் ’துரோகி' என முழக்கமிட்டதால் பொதுக்குழு மேடையில் இருந்து கீழே வைத்திலிங்கம் இறங்கினார். அனைவரும் அமைதி காக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரும், வளர்மதியும் தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டனர்.
அதிமுக பொதுக்குழுவில் உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பு உறுப்பினர்களின் வாக்குவாதத்தால் அதிமுக பொதுக்குழு நடைபெறும் மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்கள் அமைதி காக்க அதிமுக மூத்தத்தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
அனைத்து தீர்மானங்களும் நிராகரிப்பு:அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்த தீர்மானத்தை வழிமொழிவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ள கோரிக்கை விண்ணப்பத்தினை சி.வி.சண்முகம் வாசித்தார்,
'இரட்டைத்தலைமையால் கடுமையாக திமுகவை எதிர்த்துச்செயல்பட முடியாமல் உள்ளது. இரட்டைத்தலைமையின் ஒருங்கிணைப்பு இல்லாத செயல்பாட்டால் தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர். நூறாண்டு காலம் அதிமுக நீடிக்க எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற ஒற்றைத்தலைமைப்போன்று ஒன்று வேண்டும். இப்பொதுக்குழுவில் இரட்டைத்தலைமையை ரத்து செய்து, ஒற்றைத்தலைமை தேவை என வலியுறுத்தி கோரிக்கை விடப்படுகிறது. இப்பொதுக்குழுவில் அடுத்த பொதுக்குழுவிற்கான தேதியை அறிவிக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.