சென்னை: அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வரும் டிச.24ஆம் தேதியன்று மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர்-இன் நினைவு நாளினை முன்னிட்டு, அதிமுக கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், மலர் தூவி அஞ்சலி செலுத்த இருப்பதால், காவல்துறையினர் பாதுகாப்பும், அனுமதியும் வழங்கக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பெருநகர காவல் ஆணையரைச் சந்தித்து கோரிக்கை மனு வழங்கி உள்ளார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "திமுகவை 13 ஆண்டுகள் வன வாசத்திற்கு அனுப்பிய பொன்மனச்செம்மல் எம்ஜிஆர்-இன் நினைவு நாள் அன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. அதற்குரிய அனுமதியும், பாதுகாப்பும் வழங்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளோம்.
மிக்ஜாம் புயலின் தாக்கத்தின் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டத்தில் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாகப் பாதிப்படைந்து வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில், ஒரு தனியார் அமைப்பு நடத்தும் ஃபார்முலா கார் பந்தயத்திற்கு அரசின் வரிப்பணம் ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது அதை நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
இதைப்பார்க்கும் போது, ரோம் நகரும் தீ பற்றி எரியும் பொழுது அரசன் பிடில்(Fiddle) வாசித்துக் கொண்டிருந்தது போல், தமிழக மக்கள் வெள்ளத்தால் பாதிப்படைந்து பசி, பட்டினியோடு இருக்கின்ற போது ஃபார்முலா கார் பந்தயத்திற்காக இதுவரை ரூ.22 கோடி அளவில் செலவு செய்து உள்ளது திமுக அரசு.
இந்தப் பணத்தை ஸ்டாலினோ, அவரது மகன் உதயநிதி ஸ்டாலினோ அவர்களது வங்கிக் கணக்கிலிருந்து தருவார்களா? மக்களின் வரிப்பணம் ரூ.22 கோடி வீணடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு முதலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரணத் தொகை தரும் எனக் கூறியது.
ஆனால், தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், வருமான வரிக் கட்டுபவர்களுக்கு நிவாரணத் தொகை இல்லை என தெரிவித்துள்ளது. தனியார் நிறுவனங்களிலோ, அரசுப் பதவிகளிலோ சிறிய அளவில் பணிபுரியும் நபர்களும் வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளனர். ஆனால் அவர்கள் வருமானவரிக் கட்டுவதால் இந்த நிவாரணத் தொகை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரேஷன் கார்டு வைத்திருந்த அனைவருக்கும் நிவாரணத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. தற்போது, திமுக பாதிக்கப்பட்ட மக்கள் கொடுக்கும் மனுக்களைப் பரிசீலனைச் செய்து நிவாரணம் கொடுக்கும் என தெரிவித்துள்ளது.