சென்னை: சி.பா.ஆதித்தனாரின் 41ஆவது நினைவு நாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய பின் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்மொழி பட்டி தொட்டியிலும் பரவ மகத்தான பணியை செய்தவர் சி.பா.ஆதித்தனார். அவர் மறைந்தாலும் அவர் பணி தொடர்ந்து வருகிறது.
ராஜ்ய சபா உறுப்பினராக தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுபடுவேன். திமுக போல சர்வாதிகார ஆட்சி, சர்வாதிகார தலைவர் அதிமுகவில் இல்லை. ஊடகங்கள் மீது தொடுக்கப்பட்ட ஜனநாயக தாக்குதலே வழக்கு. முதலமைச்சர் கருத்து சுதந்திரம் குறித்து எதிர்க்கட்சியாக இருந்தபோது வாய் கிழிய பேசினார். இப்போது எங்கே போனது கருத்து சுதந்திரம்.
ஜூனியர் விகடன் மீது மட்டுமல்ல யார் மீது வேண்டுமானலும் காவல்துறை வழக்குப்பதிவு செய்யலாம். திமுக அரசை பற்றி பேசினாலே ஜெயில் தான் என்ற ஜனநாயக விரோத ஆட்சி நடந்து வருகிறது. காவல் துறையை ஏவல் துறையாக மாற்றியது தமிழ்நாட்டில் தலைகுனிய வைக்கும் செயல்.
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்த பின் பல மாநிலங்கள் குறைத்துள்ளது. வாக்குறுதி கொடுத்துவிட்டு ஏன் திமுக குறைக்கவில்லை. ஆட்சிக்கோ, அமைச்சருக்கோ சுயபுத்தி இல்லையா? தோழமை கட்சி ஆட்சி நடக்கும் கேரள அரசு கூட பெட்ரோல், டீசல் விலையை குறைத்திருக்கிறது. 20 நாட்களில் 18 கொலைகள் நடந்துள்ளன. தலைநகர் கொலை நகரமாகும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது" என்றார்.
இதையும் படிங்க:'திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு' - எஸ்.பி.வேலுமணி