சென்னை: கிண்டியில் தீரன் சின்னமலையின் 268வது பிறந்தநாள் விழாவில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திமுக என்பது ஊழல் கட்சியாக இருந்ததால்தான் அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கினார். ஆசியாவிலேயே அதிகளவில் சொத்து வைத்திருப்பவர்கள் திமுகவை சேர்ந்தவர்கள் என அனைவருக்கும் தெரியும்.
அண்ணாமலை வெளியிட்டுள்ள ரூ.1.34 லட்சம் கோடிக்கான சொத்துப்பட்டியலை அரசு கருவூலத்திற்கு கொண்டு சேர்த்தால் மக்களின் கஷ்டங்கள் நீங்கிவிடும். மத்தியில் இருக்கக்கூடிய வருமானவரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை இணைந்து வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த சொத்துக்களை கையகப்படுத்த வேண்டும். இதை பல வருடமாக அதிமுக கூறி கொண்டு வருகிறது.
இது சொத்துப்பட்டியலா அல்லது ஊழல் பட்டியலா? என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அண்ணாமலைக்குரியது. இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் எங்களை 'டச்' செய்வது நெருப்புடன் விளையாடுவது மாதிரி. தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சென்று பார்த்தால் தேர்தலில் போட்டியிட்ட அனைவரது சொத்து பட்டியலும் இருக்கும். தேவைக்கு அதிகமாக இருந்தால் கையகப்படுத்தி கொள்ளுங்கள். மடியில் கனம் இருந்தால்தான் பயப்பட வேண்டும். எங்களுக்கு அப்படி ஏதுமில்லை. அப்படி இருந்தால் சந்திக்க தயார்.