சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அஇஅதிமுக தோல்வியடைந்ததை அடுத்து ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணியினர் இடையே மீண்டும் வார்த்தை போர் வெடித்துள்ளது. அதன் ஒருபகுதியாக எடப்பாடி பழனிசாமி என்கிற நம்பிக்கை துரோகியை மக்கள் ஏற்கவில்லை என ஓபிஎஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்கு, முட்டாள்களின் மூளையில் 300 பூ பூக்கும் என்கிறது போல ஓபிஎஸ்சின் செயல்பாடுகள் இருப்பதாக ஈபிஎஸ் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் பதிலடி கொடுத்திருந்தார். ஜெயக்குமாரின் பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக பொய்மையின் மொத்த உருவம் ஜெயக்குமார் என ஓபிஎஸ் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிமுகவை எடப்பாடி பழனிசாமி அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்கிறார் என்று ஓபிஎஸ் அறிக்கை விடுத்தவுடன், ஆத்திரத்தில் அவசர கதியில், அவர் மீது அவதூறுகளை, பொய் மூட்டைகளை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவிழ்த்துவிட்டு இருப்பதைப் பார்க்கும் போது, பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்து கொண்டிருக்கின்ற, பெரும் பணக்காரர்கள் கையில் இந்தக் கட்சி சிக்குண்டு சிதறுண்டு போவதை மனதில் கொள்ளாமல் உண்மைக்கு மாறான தகவல்களை மனம் போன போக்கில் அறிக்கையின் மூலம் ஜெயக்குமார் வெளியிட்டு இருக்கிறார் என்பது தெளிவாகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், "ஊர்ந்து சென்று காலில் விழுந்து பெற்ற முதலமைச்சர் பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஓபிஎஸ்-ஐ அணுகி, ஆட்சியைக் காப்பாற்றுங்கள் என்று மன்றாடியவர் எடப்பாடி பழனிசாமி. ஈபிஎஸ் முதலமைச்சராகும் போது அவரை ஆதரித்தவர்கள் 122 சட்டமன்ற உறுப்பினர்கள். இந்த நிலையில் 19 சட்டமன்ற உறுப்பினர்கள் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றுக் கொண்டனர். இதனால் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 103 ஆக குறைந்துவிட்டது.
இந்தத் தருணத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும், பதவி சுகத்தை தொடர்ந்து அனுபவிக்க வேண்டும் என்ற தன்னல நோக்கத்திற்காக, அப்போதைய அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் மூலம் ஓபிஎஸ்சிற்கு தூதுவிட்டு, மன்றாடி, மடிப்பிச்சை கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், அதிமுகவிற்கு ஆதரவு அளிக்கப்பட்டது. உண்மை நிலை என்னவென்றால், எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி கவிழ்வதை தடுத்து நிறுத்தியவர் ஓபிஎஸ். இதையெல்லாம் மூடி மறைத்து, துணை முதலமைச்சர் பதவியையும், ஒருங்கிணைப்பாளர் பதவியையும் அளித்து ஓபிஎஸ்சை அரவணைத்தவர் எடப்பாடி பழனிசாமி என்று கூறுவது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது" என்று கூறியுள்ளார்.
அதோடு, "வெட்கமே இல்லாமல், உண்மைக்கு புறம்பான, விஷமத்தனமான அறிக்கையை வெளியிட்டிருக்கும் ஜெயகுமாரின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. துரோகியின் ஆட்சிக்கு அன்றைக்கே உதவிக்கரம் நீட்ட ஓபிஎஸ் மறுத்திருந்தால், ஆட்சி அன்றைக்கே கவிழ்ந்து இருக்கும். மக்களின் ஆதரவைப் பெற்று ஓபிஎஸ் முதலமைச்சராக பதவி ஏற்றிருப்பார் என்பதுதான் நிதர்சனமான உண்மை. மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு நினைவிடம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் (24-08-2021) அன்று கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின்போது, "என் தந்தை கலைஞர் அவர்களின் தீவிரமான பக்தர். அவருடைய பெட்டியில் என்றும் பராசக்தி, மனோகரா போன்ற திரைப்படங்களின் கதை வசனங்கள் அத்தனையும் இருக்கும்.
எங்களின் சிறுவயதில் அவர் மனப்பாடமாக அதை ஒப்புவிப்பார்கள். அவர் இல்லாத நேரத்தில் நாங்களாக எடுத்துப் படித்து, நாங்களாகவே பேசுகின்ற ஓர் ஆற்றல் எங்களுக்கு இருந்தது" என்று ஓபிஎஸ் பேசினார். எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டதன் பேரில்தான் அந்தத் தீர்மானத்தின்மீது பேசினார். அதாவது, 1950 மற்றும் 1960-களில் தனது சிறு வயதில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை எடுத்துக் கூறினார்கள். அந்தச் சமயத்தில் எம்.ஜி.ஆர். தி.மு.க.விற்காக பிரச்சாரம் செய்தார். அப்பொழுது அனைவருமே பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலான தி.மு.க.வில் தான் இருந்தோம். அப்பொழுது அதிமுக என்ற இயக்கமே துவங்கப்படவில்லை.
ஜெயக்குமார் தந்தையாரே சென்னை மாநகராட்சி மன்றத்திற்கு தி.மு.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்த நிகழ்வையும், இதேபோல, மத்திய அரசு திட்டங்கள் குறித்து முதலமைச்சர் அவர்கள் தலைமையில் ஓர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றபோது, குழுவின் உறுப்பினர் என்ற முறையில் மக்களவை உறுப்பினர் ப.ரவீந்திரநாத் கலந்து கொண்டதையும், மரியாதை நிமித்தமாக முதலமைச்சரை சந்தித்ததையும் வைத்து தி.மு.க.விற்கு ஆதரவாக ஓபிஎஸ் செயல்படுகிறார் என்று கூறுவது பண்பாடற்ற நியாயமற்ற, நாகரிகமற்ற செயல் என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்" என்று கூறப்பட்டுள்ளது.