சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான விதிமீறல்கள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று (பிப்.7) தலைமை தேர்தல் அலுவலர் சத்ய பிரதா சாகுவை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் இன்பதுரை ஆகியோர் வீடியோ ஆதாரங்களுடன் நேரில் சந்தித்து புகார் அளித்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், “திமுக, அரசு இயந்திரத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்தாமல், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் குறுக்கு வழியில் வெற்றி பெற முயற்சி செய்து, அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தி வருகிறது.
பணத்தை வாரி வாரி செலவழித்து, ஒட்டுமொத்த அமைச்சர்களும், திமுகவினர்களும் அங்கே முகாமிட்டு செயலாற்றி வந்தாலும், அதிமுக அங்கு அமோக வெற்றி பெறும். அமைச்சர்கள் ஒவ்வொரு பூத்துகளுக்கும் வரும்போது ஆராத்தி, வெற்றிலை, பாக்கு, தேங்காய், சொம்பு அதில் 1,000 ரூபாய் வைத்து மக்களுக்கு வழங்குகிறார்கள்.
தேர்தல் வந்தால்தான் மக்கள் கண்ணுக்குத் தெரிவார்கள். இல்லையென்றால் தெரிய மாட்டார்கள். சுவர் விளம்பரங்களிலும் அத்துமீறி ஈடுபட்டு வருகின்றனர். இவை அனைத்தையும் பற்றி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம். அது குறித்து உரிய நடவடிக்கை எடுப்போம் என சொல்லி இருக்கிறார்கள்.