இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
”அரசியலில் இரட்டை வேடம் போட்டு வெற்றி பெறலாம் என்ற மமதையில் இந்த விடியா அரசை தலைமை தாங்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தற்போது கனவில் மிதந்து வருகிறார். ‘புலிக்கு பயந்தவர்கள் எல்லாம் என்மீது படுத்துக் கொள்ளுங்கள்" என்று ஒரு அதிபுத்திசாலி சொல்லுவது போல், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு விஷயத்தில், தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்கும் கதையாக, சட்டமன்ற அனைத்துக் கட்சிகளையும் இன்றைய முதல்வர் துணைக்கு அழைக்கிறார்.
ஏறத்தாழ 17 ஆண்டுகள் மத்திய அரசில் கொஞ்சி குலாவியபோது மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியுட்ரினோ, நீட் மற்றும் 10 சதவீத பொருளாதார இட ஒதுக்கீடு போன்ற மக்கள் விரோத சட்டங்களுக்கு, பூம் பூம் மாடு போல் தலையாட்டிவிட்டு, இன்றைக்கு ஏதோ வறியவர்களைக் காக்க அவதாரம் எடுத்தது போல் வித்தை காட்டிக்கொண்டிருக்கிறார் இந்த பேசா மடந்தை முதலமைச்சர்.
பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு குறித்து ஆராய 2006 - ம் ஆண்டு ஒரு கமிஷனை அமைத்தது காங்கிரஸ் - திமுக கூட்டணியிலான மத்திய அரசு . அந்த கமிஷன் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இதற்கான சட்டத்தை உருவாக்கியதும் காங்கிரஸ் - திமுக மத்திய கூட்டணி அரசு அப்போது, திமுக சார்பில் பதவியில் இருந்த மத்திய அமைச்சர்கள் அமைச்சரவையில் ஒப்புதல் அளித்ததும் நாடறிந்த உண்மை.
இந்த சட்டத்தைத்தான் தற்போதைய B.JP அரசு 2019 - ல் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறது.
காரியம் ஆகவேண்டுமென்றால் யார் காலையும் பிடிப்பதும், காரியம் முடிந்தவுடன் காலை வாருவதையும் கொள்கையாகக் கொண்ட திமுக தலைமை, தற்போது BJP தேவையில்லை என்பதால் இந்த சட்டத்தை எதிர்ப்பதுபோல் நடிக்கிறது.
இந்த சட்டத்திற்கு எதிரான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நடந்தபோது, அந்த வழக்கில் எப்படியெல்லாம் நம்முடைய வாதங்களை எடுத்துச் சொல்ல வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றக் கட்சிகளையும் அழைத்து ஆலோசனை நடத்தாமல், தாந்தோன்றித்தனமாக வாதிட்டு மூக்கறுபட்ட பின், வழக்கின் தீர்ப்பு வந்தபிறகு, தற்போது மற்ற கட்சிகளை அழைப்பது எந்தவிதத்தில் ஏற்றுக்கொள்ள முடியும்?
இன்றைய நிலையில் தமிழக சட்டமன்றத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் திமுக - வின் தயவால் அங்கு இடம் பெற்றவை, அவைகளில், இரண்டு பிரதான கட்சிகளான காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த முதல்வரின் இரட்டை வேடத்தை புரிந்துகொண்டு, அவரது கோரிக்கையை நிராகரித்துள்ளது.
பொருளாதார அடிப்படையிலான, இந்த பொருளாதார இட ஒதுக்கீட்டை மனமுவந்து வரவேற்பதாகவும் அக்கட்சிகள் தெரிவித்துள்ளன.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை எந்தவொரு இட ஒதுக்கீடாக இருந்தாலும் அது எவரையும் பாதிக்கக்கூடாது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட , தாழ்த்தப்பட்ட மக்களுக்கான 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு மண்டல் கமிசன் பரிந்துரை அடிப்படையில் பிரச்சனை வந்தபோது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கலந்தாலோசித்து, அவர்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமரை சந்திக்க வைத்து நம்முடைய நிலைப்பாட்டை எடுத்து வைத்தார்.