சென்னை:சென்னை - நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டு வரக்கூடிய நிலையில் அதிமுகவும் தனது பணியைத் தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவின் பூத் கமிட்டி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துவதற்கான களப்பணி குறித்து மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட கழக செயலாளர் கூட்டம் இன்று (நவ.21) அதிமுக தலைமைக் கழகத்தில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.
ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறும் போது, "ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார் என்ற படகோட்டி திரைப்படப் பாடல் உள்ளது. ஒவ்வொரு நாளும் துயரம் என அறிந்தே அன்றே அதிமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு திட்டங்கள் பொருளாதார அடிப்படையில் கொண்டு வரப்பட்டது. ஆனால், தற்போது திமுக ஆட்சியில் ஒரு திட்டம் கூட மீனவர்களுக்குக் கொண்டு வரவில்லை என்றார். தற்போது, மீனவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதி மிகக் குறைவு. அதிமுக ஆட்சிக் காலத்தில் அதிக நிதி கொடுக்கப்பட்டது. இப்போது மீனவர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள்.
அந்நிய நாட்டவர்களால் தமிழக மீனவர்களைக் கைது செய்துள்ளது என அறிந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரு கடிதம் எழுதினால் மட்டும் போதுமா உடனே நடவடிக்கை எடுத்துவிட வேண்டாமா எனக் கேள்வி எழுப்பினார்.
மக்களுக்கு திமுக அரசு மேல் கடுமையான அதிருப்தி உள்ளனர். தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. விலை வாசி உயர்வு, மின்சார கட்டண உயர்வு அனைத்து பிரச்சாரத்தில் பேசப்படும். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதாகச் சொன்னால் தமிழ்நாட்டு மக்கள் நம்ப மாட்டார்கள். எவ்வளவு திட்டங்களைச் செயல்படுத்துவோம் என தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் கூறினார்கள். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது எங்கள் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட எத்தனையோ திட்டங்களைச் சொல்லிப் பேசுவோம்.
திமுக ஆட்சியில் இருக்கும் கடுமையான எதிர்ப்பு அலைகள் இருக்கும் நிலையில் எங்கள் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை நினைவில் கொண்டு கண்டிப்பாக மக்கள் எங்களுக்கு வாக்கு அளிப்பார்கள். இன்று நடைபெற்ற ஆலோசனை என்பது கட்சியைப் பலப்படுத்துவது தொடர்பாக மட்டும் தானே தவிர வேறு ஏதும் கலந்து ஆலோசிக்கப்படவில்லை. மாநில அரசு என்றாலும், மத்திய அரசு என்றாலும் மக்கள் விரோத போக்காகச் செயல்பட்டு இருந்தால் அது பற்றியும் பிரச்சாரத்தில் கட்டாயமாகப் பேசுவோம்." எனத் தெரிவித்தார்.