சென்னை:அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை ஏறக்குறைய முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை (மே17) சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்தியத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததில் இருந்தே, பல்வேறு நடவடிக்கைகளை அவரது தரப்பினர் முன்னெடுத்துள்ளனர்.
கட்சியை வலுப்படுத்த புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பணிகள் தற்போது எந்த நிலையில் இருக்கிறது என்பது தொடர்பாகவும், சமீபத்தில் நடைபெற்ற ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் சந்திப்பு குறித்தும், அவர்களது சந்திப்பின் மூலம் தென் மாவட்டங்களில் ஏற்படும் தாக்கம் பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்புள்ளது.
அதிமுகவில் அமைப்பு ரீதியாக 75 மாவட்டச் செயலாளர்கள் இருந்தனர். ஆனால், கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியதால் அவருக்கு ஆதரவாக 6 மாவட்டச் செயலாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதனால் தற்போது அதிமுகவில் 69 மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர். எனவே, மீதமுள்ள 6 மாவட்டங்களுக்கு செயலாளர்களை நியமிப்பது குறித்தும், ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதுபற்றியும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கட்சியின் அடுத்தகட்ட நகர்வு, வளர்ச்சி குறித்தும் மாவட்டச் செயலாளர்களுடன், எடப்பாடி பழனிசாமி விவாதிக்கலாம் எனத் தெரிகிறது.