சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (செப். 25) அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள நிலையில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் பனிப்போர் நிலவி வருகிறது. அண்ணாவை விமர்சித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசியது அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் ஆவேசமாக அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்தனர்.
'பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி இல்லை' என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடியாக அறிவித்தார். பா.ஜ.க. துணை தலைவர்கள் கரு.நாகராஜன், சக்ரவர்த்தி உள்பட நிர்வாகிகள் பலரும் எதிர்க்கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே வார்த்தை போர் நடந்து அரசியல் களத்தை பரபரப்பாகியது.
மாவட்ட செயலாளர்கள் கூட்டம்:இந்த சூழ்நிலையில் பா.ஜ.க. பற்றியோ, கூட்டணி குறித்தோ நிர்வாகிகள் யாரும் பொதுவெளியில் கருத்துகள் தெரிவிக்க கூடாது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாய்மொழி உத்தரவை பிறப்பித்தார். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையே பிரச்சினை எதுவும் இல்லை என்று தெரிவித்து இருந்தார்.
இதன் மூலம் பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க. நீடிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலருக்கு பா.ஜ.க.வுடனான கூட்டணியில் விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று பிற்பகல் 3.45 மணிக்கு இந்த கூட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணியை தொடரலாமா? அல்லது முறித்துக் கொள்ளலாமா? என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த கூட்டத்தில் பாஜக கூட்டணி குறித்து அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கருத்துகளை கேட்டறிவார் என்றும் தெரிகிறது. மேலும், இந்த கூட்டத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்தும் முடிவு எடுக்கப்படலாம் எனவும், பிற கூட்டணிக் கட்சிகளை தன்வசம் ஈர்க்க திட்டமிடலாம் எனவும், மாவட்ட செயலாளர்கள் மற்றும் மூத்த தலைவர்களின் கருத்துகள் கேட்டு பாஜகவுடன் கூட்டணி பற்றி அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:"பா.ஜ.க வை தன் தோலில் இருந்து இறக்கும் தைரியமும், தெம்பும் அ.தி.மு.க.விற்கு இல்லை" - ஜவாஹிருல்லா!