சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருவள்ளூர் தெற்கு, வடக்கு மாவட்டங்களுக்குள்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியிடும் அதிமுக, அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இன்று (பிப்ரவரி 13) பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "அதிமுக ஆட்சிக் காலத்தில் ஐந்து லட்சம் ஏழை, எளிய மக்களுக்குத் தரமான கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்பட்டன. திமுகவின் 2006-2011 வரையிலான ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு முழுவதும் மின்சாரத் தட்டுப்பாடு கடுமையாக இருந்தது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்றபின் மின் தடை இல்லாத மாநிலமாகத் தமிழ்நாடு மாறியது.
அதிமுக ஆட்சியில் அமைதிப் பூங்காவாக இருந்த தமிழ்நாடு
அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருந்தது. தற்போது திமுக அரசு சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத மக்கள் விரோத ஆட்சியாக உள்ளது. திமுக ஆட்சி அமைந்ததும் அனைவருக்கும் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கொடுத்த அறிவிப்பினால் இன்று திமுகவை நம்பி மக்கள் கடனாளியாக மாறியுள்ளனர். நிர்வாகத்திறன் அற்ற ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது.