சென்னை:எதிர்கட்சிகளை சகட்டு மேனிக்கு விமர்சித்து தள்ளும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் வார்த்தை கனைகளால் கூட்டணி கட்சிகளும் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலை நெடு நாட்களாகவே இருந்து வந்தது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிறைக்கு சென்று வந்தவர் என அண்ணாமலை தெரிவித்த கருத்து அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
பதிலுக்கு அதிமுகவினரும் அண்ணாமலையை விமர்சிக்க தவறவில்லை. அண்ணாமலையின் விமர்சனங்களுக்கு அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் பதிலடி கொடுத்து வந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மௌனம் சாதித்து வந்தார். இந்நிலையில் அண்ணாமலை அவரது ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரையைத் துவங்கும் முன் திமுக பைல்ஸ் என்னும் பட்டியை வெளியிட்டார். அதற்கு முன்னதாக இதே போல் முன்பு ஆட்சி செய்தவர்கள் குறித்த பட்டியலையும் வெளியிடுவேன். எனக்கு ஊழலை ஒட்டு மொத்தமாக ஒழிக்க வேண்டும் என பேசி இருந்தார்.
அதற்கு அதிமுகவினர் அண்ணாமலையை கடுமையாக கண்டித்து பேசி இருந்தனர். இதனை அடுத்து எடப்பாடி பழனிசாமியும் அண்ணாமலையை விமர்சித்து பேசி இருந்தார். இதனால் அதிமுக - பாஜக இடையிலான கூட்டணி முறிவடையும் என அப்போது கருத்துகள் பரவத் துவங்கியது. இதனை அடுத்து டெல்லி சென்ற அதிமுகவினர் அமித்ஷாவை சந்தித்தனர். அந்த சந்திப்பில் அண்ணாமலையும் பங்கேற்று இருந்தார். அதனை அடுத்து கூட்டணி சுமூகமாகி விட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதலமைச்சர் அண்ணாத்துரை குறித்து ஒரு கருத்தை தெரிவித்து இருந்தார். அண்ணாமலையின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதிமுகவினரும், திமுகவினரும் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தனர்.
மேலும், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அதிமுகவிற்கு பாஜகவுடன் கூட்டணி இல்லை, அதை தேர்தல் நேரத்தில் தான் முடிவு செய்ய வேண்டும் என பகீரங்கமாக அறிவித்தார். அதிமுக - பாஜக இடையில் தொடர்ந்து கருத்து ரீதியான மோதல் நடைபெற்று வந்தாலும் கூட்டணி முறிவடைவது குறித்து இரு தரப்பிலும் யாரும் தெரிவிக்காமல் அது மேலிடத்தின் முடிவு என்றே தெரிவித்து வந்தனர்.