சென்னை: கர்நாடகாவில் அடுத்த மாதம் மே 10ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சியை தக்க வைப்பதற்காக அக்கட்சியின் தலைவர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். கர்நாடகாவைப் பொறுத்தவரையில் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் என மும்முனை போட்டி நிலவுகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் பாஜகவிற்கு ஒரு முக்கியமான தேர்தலாக கருதப்படுகிறது.
இதனால் கர்நாடகாவில் உள்ள சிறு சிறு கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. கர்நாடகாவில் 15க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தமிழர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். பெங்களூருவில் அதிமுகவிற்கு 10க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் உள்ளன. இதனால் ஏற்கனவே தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால், கர்நாடகாவிலும் பாஜக கூட்டணியில் அதிமுக இணைய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாக கூறப்படுகிறது.
அதற்கு, கர்நாடகாவில் கூட்டணி அமைக்க வேண்டும் என்றால் அதிமுகவிற்கு 3 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று அதிமுகவை சேர்ந்த தம்பிதுரையை வைத்து எடப்பாடி பழனிசாமி கேட்டுள்ளார். ஆனால், அதற்கு மவுனம் காத்து வந்த பாஜக கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதனால் அதிமுகவிற்கு தொகுதிகள் ஒதுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கர்நாடகத் தேர்தலை வைத்து எடப்பாடி பழனிசாமி பெரிய கணக்குப் போட்டிருந்தார்.
அதில், கர்நாடகாவில் போட்டி போடுவதன் மூலம் அதிமுக வெற்றிபெறாது என்று எடப்பாடி பழனிசாமிக்கே தெரியும். ஆனால், பாஜக கூட்டணியில் போட்டியிடும் பட்சத்தில் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் கேள்வி எழும்போது, பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க கூறலாம் என்பது எடப்பாடி பழனிசாமியின் கணக்காக இருந்தது. தற்போது பாஜக ஒரு தொகுதி கூட ஒதுக்காமல் வெறும் ஆதரவை மட்டுமே கேட்டதால் எடப்பாடி பழனிசாமி வியூகத்தை மாற்றியுள்ளார்.
திமுகவினருடைய சொத்துப் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலையை அதிமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்தனர். அதிமுக - பாஜக இடையே கூட்டணி அமைத்தாலும் இந்த கூட்டணி படுதோல்வியைச் சந்திக்கும் நிலையே ஏற்படும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இருந்தாலும், ஒரு சில காரணங்களுக்காக பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் நிலையில் அதிமுக உள்ளது. கர்நாடகத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நோக்கத்தில் எடப்பாடி பழனிசாமி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
கர்நாடகாவில் புலிகேசிநகர் தொகுதியில் அதிமுகவின் அவைத்தலைவர் அன்பரசன் என்பவரை வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஏற்கனவே, புலிகேசிநகர் தொகுதியில் பாஜக சார்பாக முரளி என்பவரை அக்கட்சி அறிவித்துள்ளது. பாஜக வேட்பாளர் நிறுத்திய தொகுதியில் அதிமுக வேட்பாளரை நிறுத்தி இருப்பது தனித்துப் போட்டி என்ற நிலையையே உணர்த்துகிறது. ஆனால், "தனித்தா? அல்லது கூட்டணியா? என்பது குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார்" என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத் தேர்தலில் போட்டியிட சின்னம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவெடுக்க உள்ளது. கர்நாடகாவில் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் அதற்குள் தேர்தல் ஆணையம் முடிவெடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நாளை(ஏப்.20) அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கர்நாடகா தேர்தல் குறித்து நிர்வாகிகள் மத்தியில் விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும், தமிழகத்திலும் அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெற வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்ட இருக்கிறது.
கர்நாடகத் தேர்தலில் பாஜக - அதிமுக இடையே நடந்து கொண்டிருக்கும் சூழலை ஓபிஎஸ் தரப்பினர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். அதிகாரப்பூர்வமாக கர்நாடகா தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி இல்லாத பட்சத்தில் பாஜகவிற்கு ஓபிஎஸ் தரப்பு ஆதரவு தரும் என கூறப்படுகிறது. ஏற்கனவே நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் அக்கட்சிக்கு ஆதரவு என ஓபிஎஸ் கூறியிருந்தார்.
கர்நாடகத் தேர்தலில் அதிமுக சார்பாக வேட்பாளர் அறிவிப்பு குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், “கர்நாடகா தேர்தலை பொறுத்தவரையில் அதிமுகவிற்கு வேலையில்லை. தமிழகத்திலும், புதுச்சேரியில் மட்டும்தான் அதிமுக அங்கீகரிக்கப்பட்ட கட்சி. கர்நாடகா தேர்தலில் அதிமுகவிற்கு, பாஜக ஒரு தொகுதியைக் கூட ஒதுக்கவில்லை. ஒரு தொகுதி ஒதுக்கியிருந்தால் எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு ஒத்துப்போய் இருப்பார். இதனால் தனித்துப் போட்டியிடும் நோக்கத்தில் வேட்பாளரை நிறுத்தியுள்ளார்.
தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை தேர்தல் நேரத்தில் தான் சின்னம் தொடர்பான முடிவை ஆணையம் எடுக்கும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுகள் இருக்கும் நிலையில் அப்போது சின்னம் தொடர்பாக சிக்கல் எழுந்தால் சிரமமாக இருக்கும் என எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். அதனால்தான் கர்நாடகத் தேர்தலை பயன்படுத்திக்கொண்டு தற்போது பொதுச்செயலாளராக அங்கீகாரம் பெற்றுவிடலாம் என ஈபிஎஸ் வேட்பாளரை அறிவித்துள்ளார்.
ஏற்கனவே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், இதே போன்ற நிலையில் பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்யப்படும் வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே போன்றும் தற்போதும் நடக்கலாம். அப்படி நடந்தாலும் அது எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக அமையும். 2024-ல் அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா என்பது சந்தேகம்தான். அதனால் இது போன்ற தீர்ப்புகள் நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் சின்னம் பெறுவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என ஈபிஎஸ் நினைக்கிறார்.
தனித்துப்போட்டி என்ற அதிமுகவின் நிலைப்பாட்டை பாஜக ஏற்காது. இதனால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மேல் உள்ள வழக்குகள் வேகப்படுத்தப்படலாம். பாஜகவின் உதவி இல்லாமல் இந்திய தேர்தல் ஆணையத்தில் வழக்குகள் மூலம் தன்னை பொதுச்செயலாளராக அங்கீகரித்து, இரட்டை இலை சின்னத்தைப் பெற்றுவிடலாம் என்ற ஈபிஎஸ்ஸின் மனநிலை இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது" எனக் கூறினார்.
இதையும் படிங்க: Pulikeshi Nagar: கர்நாடக தேர்தலில் களமிறங்கும் அதிமுக.. வேட்பாளரை அறிவித்த ஈபிஎஸ்!