ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட வேண்டும் என்ற அதிமுகவின் விருப்பத்தை ஏற்றுக் கொள்வதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியின் சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் இயக்கத்திற்கு ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
இத்தொகுதியில் தமாகா வேட்பாளராக எம். யுவராஜா அறிவிக்கப்பட்டு போட்டியிட்டார். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அறிவித்த பொய்யான வாக்குறுதிகளையும் மீறி, எங்கள் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கடின உழைப்பால், வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற்று 58,396 வாக்குகள் பெற்றோம். தொடர்ந்து அத்தொகுதியில், கடந்த 20 மாதங்களாக மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறோம்.
எதிர்பாராத சூழல் காரணமாக ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று 19.01.2023 வியாழக்கிழமை அஇஅதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் என்னை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து இடைத்தேர்தல் குறித்து பேசினார்கள். அப்போது இந்த இடைத்தேர்தலில் அஇஅதிமுகவின் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தை என்னிடம் தெரிவித்தார்கள்.