சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று தமிழ்நாடு திரும்பிய சசிகலாவிற்கு அதிமுக கொடியுடன் கூடிய கார் வழங்கிய அதிமுக நிர்வாகி உட்பட ஏழு பேரை நேற்று மாலை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி அதிமுக தலைமை உத்தரவிட்டது.
சசிகலா சிறை சென்றதிலிருந்து அமைதி காத்த அவரது ஆதரவாளர்கள், சசிகலாவின் வருகையையொட்டி பல இடங்களில் பேனர், போஸ்டர்களை அதிமுக தொண்டர்கள் சிலர் ஒட்டினர். இதைத் தொடர்ந்து சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியவர்களை, கட்சியின் கொள்கை, கோட்பாட்டிற்கு விரோதமாக செயல்பட்டதாக கூறி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அதிமுக தலைமை நீக்கியது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று பெங்களூரு விமானநிலையம் அருகே இருந்த தனியார் விடுதியில் தங்கியிருந்த சசிகலாவை சந்திக்க முயற்சி செய்த கர்நாடக மாநில அதிமுக செயலாளர் யுவராஜையும் அதிமுக தலைமை அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டது. இந்நிலையில், நேற்று தமிழ்நாட்டுக்குள் அதிமுக கொடி கட்டிய காரில் வர சசிகலாவுக்கு காவல்துறை அனுமதிக்காத போது, தனது காரை வழங்கிய கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட ஒன்றிய செயலாளர் சம்பங்கி உள்ளிட்ட ஏழுபேரை அதிமுக தலைமை நேற்று மாலை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டது.
பெங்களூருவிலிருந்து இருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்ட சசிகலா 23 மணி நேர நீண்ட பயணத்திற்கு பின் தியகராய நகர் இல்லத்திற்கு வந்தடைந்தார். தென் மாவட்டங்களில் இருந்து அதிகப்படியான தொண்டர்கள் திரண்டு வந்து சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். விடிய, விடிய விழித்திருந்து சசிகலாவின் ஆதரவாளர்கள் அவருக்கு சென்னை எல்லையில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.