தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீண்டும் தலைத்தூக்கிய அதிமுக - பாஜக மோதல்.. கூட்டணியை முறிக்க திட்டமா?

அதிமுக - பாஜக கூட்டணிக்கு இடையே மீண்டும் உச்சகட்ட மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்த கூட்டணி தொடருமா? என்ற கேள்வி குறித்து விரிவாக அலசுகிறது இந்தத் தொகுப்பு..

’பத்த வச்சிட்டியே அண்ணாமலை’ - உச்சகட்ட மோதலில் அதிமுக - பாஜக கூட்டணி
’பத்த வச்சிட்டியே அண்ணாமலை’ - உச்சகட்ட மோதலில் அதிமுக - பாஜக கூட்டணி

By

Published : Jun 13, 2023, 10:19 AM IST

Updated : Jun 13, 2023, 11:38 AM IST

சென்னை:பிரபல ஆங்கிலப் பத்திரிகைக்கு பேட்டியளித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையிடம், "1991 - 1996 ஊழல் மிக மோசமான காலகட்டங்களில் ஒன்றாக இருந்தது என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதிலளித்துப் பேசிய அண்ணாமலை, "தமிழ்நாட்டில் பல நிர்வாகங்கள் ஊழல் நிறைந்தவை. முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றங்களில் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதனால் தான் தமிழ்நாடு ஊழல் மிகுந்த மாநிலமாக மாறி உள்ளது. ஊழலில் முதலிடம் என்று சொல்வேன்" எனக் கருத்து கூறியிருந்தார்.

அண்ணாமலை கூறிய படி, 1991 - 1996 காலகட்டத்தில் ஆட்சியில் இருந்தது அதிமுக தான். மறைந்த ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தார். எனவே, ஊழல் குற்றச்சாட்டுக்காக ஜெயலலிதா தண்டிக்கப்பட்டுள்ளார் எனவும் அண்ணாமலை விமர்சனம் செய்து உள்ளதாக அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

குறிப்பாக, "பாஜக மாநிலத் தலைவராக இருப்பதற்கு அண்ணாமலைக்கு தகுதி இல்லை. அண்ணாமலைக்கு நாவடக்கம் வேண்டும். அண்ணாமலையின் விமர்சனப் போக்கு தொடர்ந்தால், அதிமுக - பாஜக கூட்டணி மறுபரிசீலனை செய்யப்படும்" என அதிமுகவின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருந்தார்.

ஜெயக்குமாரின் இந்த விமர்சனத்திற்கு பதில் அளித்த பாஜகவின் துணைத் தலைவர் கரு.நாகராஜன், "அண்ணாமலை ஆங்கில பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியை ஒழுங்காக படிக்காமல் ஜெயக்குமார் பிதற்றிக் கொண்டிருக்கிறார். கூட்டணி என்பது எல்லோரும் இணைந்தது தான். பெரியண்ணன் வேலை அதாவது Big Brother வேலை யாருக்கும் கிடையாது.

அண்ணாமலை பற்றி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது. 19 கோடி உறுப்பினர் கொண்ட இயக்கத்தை செடி என்று சொல்வதா?” என கூறினார். இதேபோன்று அதிமுக, பாஜகவில் இருக்கும் இரண்டாம் கட்டத் தலைவர்கள் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக - பாஜக மோதல்கள்: அதிமுக பாஜக கூட்டணிக்கிடையே கருத்து மோதல்கள் வெடிப்பது இது முதல் முறையல்ல. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு பாஜகவுடன் கூட்டணி அமைத்ததுதான் காரணம் என அதிமுகவின் மூத்த தலைவர்கள் பேசி இருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அடைந்த தோல்விக்கும் பாஜகவே காரணம் என அதிமுகவின் மூத்த தலைவர்கள் விமர்சனம் செய்திருந்தனர். இதற்கு பாஜகவுடன் கூட்டணி அமைத்ததன் மூலமே 43 ஆயிரம் வாக்குகளை அதிமுக கூட்டணி பெற்றுள்ளது என பாஜகவின் தலைவர்கள் கூறினர்.

அப்போதே கூட்டணி தொடருமா என்று கேள்வி எழுந்த நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி தொடர்கிறது என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதன் மூலம் மோதல்போக்கை இரு கட்சியினரும் கைவிட்டதாக தெரிந்தது. இதனையடுத்து, கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி 'திமுக பைல்ஸ் 1' என்ற தலைப்பில் திமுகவினருடைய சொத்துப் பட்டியலை அண்ணாமலை வெளியிட்டார்.

ஈபிஎஸ் கூறியது என்ன?அப்போது, முன்னாள் ஆட்சியில் இருந்த கட்சியினருடைய சொத்துப் பட்டியலும் வெளியிடப்படும் என அண்ணாமலை கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், கூட்டணிக்குள் இருக்கும் கட்சி குறித்து இதுபோல் பேசலாமா என்ற கேள்வியும் எழுந்திருந்தது. இது குறித்து பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “அண்ணாமலை முதிர்ச்சி இல்லாத தலைவர்.

தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக இது போன்று பேசி வருகிறார். அதிமுக - பாஜக கூட்டணி தொடர்கிறது என்று அமித்ஷா ஏற்கனவே கூறிவிட்டார். கூட்டணி குறித்து முடிவு செய்வதற்கு பாஜக மாநில தலைமைக்கு உரிமை இல்லை” என தெரிவித்திருந்தார்.

இந்த மோதல் போக்கு தொடர்ந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியையும், அண்ணாமலையையும் நேரடியாக டெல்லிக்கு அழைத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா சமாதானப்படுத்தி வைத்தார். இதன் மூலம் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் இரு கட்சிக்குள் இருக்கும் கசப்புகள் மறக்கப்படும் என பேசப்பட்டது.

ஆனால், கூட்டணியில் இருந்து கொண்டு கூட்டணி தர்மத்தை மீறி பாஜக செயல்பட்டு வருவதாக அதிமுகவினர் தொடர்ந்து குற்றச்சாட்டை வைத்து வந்தனர். குறிப்பாக, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி கட்சியினரை ஆலோசிக்காமல் பாஜக தேர்தல் பொறுப்பாளர்களை நியமனம் செய்திருந்தது.

அடுத்ததாக, தமிழ்நாட்டில் பாஜக 25 தொகுதிகளில் வெற்றி பெறும் என அண்ணாமலை கூறி வந்த நிலையில், தற்போது மத்திய அமைச்சர் அமித்ஷாவும் இதே கருத்தை முன் வைத்துள்ளார். பலமுறை இந்த விவகாரத்தில் பாஜக தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்கு அக்கட்சியினர் இதுபோன்று கூறுகின்றனர் என அதிமுக தரப்பில் கூறப்பட்டது.

ஆனால், இந்த முறை அதிமுகவினர் தனது முன்னோடி தலைமையாக கருதும் ஜெயலலிதா மீது அண்ணாமலை விமர்சனம் வைத்துள்ளார். இதற்கு முன்பு ஏற்பட்ட கருத்து மோதல்களை விட, இந்த விவகாரம் உச்சகட்டத்தை எட்டும் என கூறப்படுகிறது. அண்ணாமலை பற்ற வைத்த நெருப்பை இந்த முறை அமித்ஷா எப்படி அணைக்கப் போகிறார் என்றும் கேள்வி எழுந்துள்ளது.

இதுவரை மீறிய கூட்டணி தர்மமும், தோல்வியும்: இதற்கு முன்பு ஏற்பட்ட மோதல்களைப் போல இந்த விவகாரத்திலும் இரண்டு தரப்பையும் அழைத்து சமாதானம் செய்யப்படும் என பேசப்படுகிறது. மேலும், இது குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், “இதற்கு பின்னர் அதிமுக - பாஜக கூட்டணி தொடர்வது கடினம்.

அப்படியே தொடர்ந்தாலும், தலைவர்கள் மட்டுமே கை கோர்ப்பார்கள். அடிமட்டத்தில் இரு கட்சி தொண்டர்களிடையே ஒற்றுமை இல்லை. இதற்கு உதாரணம், 1991 - 1996 காலகட்டத்தில் ஜெயலலிதா, காங்கிரஸ் கட்சியினர் இடையே கடுமையான மோதல் போக்கு இருந்தது. இறுதியில் ஜெயலலிதா ஆட்சி நிறைவு பெற்றபோது, மீண்டும் 1996இல் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்தார்.

அந்தக் கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. அதே போன்று, இந்தியாவிலேயே ஊழலில் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று 2019-ல் அமித்ஷா கூறினார். ஆனால், அப்போது ஆட்சியில் இருந்த அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததால் அந்தக் கூட்டணி படுதோல்வியை சந்தித்தது.

அதேபோன்று, தற்போதும் இரு கட்சிகளை சேர்ந்தவர்களும் மோதல் போக்கை கடைபிடித்து வருவதால், கூட்டணி வைத்தாலும் அந்த கூட்டணி தோல்வியைச் சந்திக்கும். கூட்டணி தொடர்கிறதா அல்லது முடிகிறதா என்பது இன்னும் 15 நாட்களில் தெரிந்து விடும். கூட்டணி முடிவுக்கு வந்தால் வருமான வரித்துறையும், அமலாக்கத் துறையும் அதிமுகவின் மீது பாயும் என நினைக்கிறேன்.

அந்த நிர்பந்தத்தின் அடிப்படையிலேயே பாஜகவின் செயல்பாட்டை அதிமுக கடந்து செல்கிறது. அண்ணாமலை அரசியலில் முதிர்ச்சி இல்லாதவர்தான். ஆனால், கூட்டணிக்குள் இருக்கும்போது கடுமையான விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. தென்சென்னை தொகுதி ஜெயக்குமார் மகன் ஜெயவர்த்தன் போட்டியிட்ட தொகுதி.

அதனால், ஜெயக்குமார் விமர்சனத்தை கூட்டி இருக்கலாம். அண்ணாமலை பற்ற வைத்த நெருப்பை அணைத்தாலும், நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணிக்கு தோல்வியே தரும்” என கூறினார்.

இதையும் படிங்க:பாஜகவின் பிடியிலிருந்து அதிமுகவால் விலக முடியாது - ஜவாஹிருல்லா எம்எல்ஏ பேச்சு

Last Updated : Jun 13, 2023, 11:38 AM IST

ABOUT THE AUTHOR

...view details