சென்னை:முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக சட்டப்பேரவையில் அங்கீகரிக்காததை கண்டித்து நாளை (அக்.19) அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை திட்டமிட்டபடி உண்ணாவிரதம் நடைபெறும் என அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்றபோது பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களால் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எதிர்க்கட்சி துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் ஆர்.பி. உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக அங்கீகரிக்கக்கோரி அதிமுக சார்பில் சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதம் வழங்கப்பட்டது. இந்நிலையில், கடிதம் வழங்கி வெகுநாட்கள் ஆகியும் இதுவரை ஆர்.பி. உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக அங்கீகரிக்காததை குறிப்பிட்டு அதிமுகவைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இன்று (அக்.18) சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
மேலும், ஆர்.பி. உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக சட்டப்பேரவையில் அங்கீகரிக்காததைக் கண்டித்து நாளை (அக்.19) அதிமுக சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.