சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தாம்பரம் மாநகராட்சியில் அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் 60 ஆவது வார்டில் கீதா என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து அவர் இன்று (பிப்.23) சென்னை விமான நிலையம் வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனை நேரில் சந்தித்து சான்றிதழ் கொடுத்து வாழ்த்து பெற்றார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. திமுக வெற்றிக்கு கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய இட பங்கீடு ஒருபுறம் இருந்தாலும், ஆட்சி பலம், அதிகார பலம், பண பலம் ஆகியவற்றால் தான் வெற்றி பெற முடிந்தது.
கணிசமான இடங்களில் வெற்றி
தேர்தல் ஆணையத்தின் கோட்பாடுகளை மீறிய கட்சியாகவே ஆளும் கட்சி கூட்டணி செயல்பட்டது. அதிமுக கூட்டணியில் த.மா.கா.விற்கு குறைவான இடங்களில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தாலும் கூட கணிசமான இடங்களில் வெற்றி பெற்று உள்ளோம். கூட்டணி தர்மத்தை கைப்பிடிக்கும் கட்சியாகவே த.மா.கா. செயல்பட்டு உள்ளது.