தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏப்ரல் 8 தமிழகம் வரும் பிரதமர் மோடி.. சிறப்பு பாதுகாப்புக் குழு சென்னை வருகை! - pm modi tn visit

பிரதமர் நரேந்திர மோடி தமிழக வருகையை முன்னிட்டு, அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக டெல்லியில் இருந்து சிறப்பு பாதுகாப்புக் குழுவினர் சென்னை வந்துள்ளனர். இக்குழுவினர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், மயிலாப்பூர் மடம் உள்ளிட்ட பிரதமர் மோடி செல்லவிருக்கும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

Ahead
மோடி

By

Published : Apr 6, 2023, 10:30 AM IST

சென்னை:பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாட்கள் பயணமாக வரும் 8ஆம் தேதி சென்னை வருகிறார். 8ஆம் தேதி, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள பேகம்பட் விமான நிலையத்தில் இருந்து, தனி விமானம் மூலம் சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். பின்னர், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். பிறகு மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம், பல்லாவரம் ஆல்ஸ்ட்ராம் கிரிக்கெட் மைதானம் ஆகிய இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, அன்று இரவு 7:45 மணிக்கு தனி விமானத்தில் கர்நாடக மாநிலம் மைசூர் சென்று தங்குகிறார்.

வரும் 9ஆம் தேதி காலை மைசூரில் இருந்து ஹெலிகாப்டரில் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் பிரதமர், அங்கு 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' ஆவணப்படத்தின் மூலம் ஆஸ்கார் விருது பெற்ற பொம்மன்-பெள்ளி தம்பதியை நேரில் சந்திப்பதோடு, ஆவணப்படத்தில் இடம்பெற்ற யானைகளையும் நேரில் பார்வையிட இருக்கிறார். அதன்பின்பு மீண்டும் ஹெலிகாப்டரில் மைசூர் செல்கிறார்.

இந்த நிலையில், பிரதமரின் வருகையை ஒட்டி டெல்லியில் இருந்து சிறப்பு பாதுகாப்புக் குழுவினர் நேற்று(ஏப்.5) சென்னை வந்துள்ளனர். எஸ்பிஜி ஐஜி போகத், தலைமையில் 40-க்கும் மேற்பட்ட எஸ்பிஜி வீரர்கள் விமானம் மூலம் சென்னை வந்தனர். இக்குழுவினர் நேற்று காலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், மயிலாப்பூர் மடம், பல்லாவரம் ஆல்ஸ்ட்ரோ கிரிக்கெட் மைதானம், சென்னை விமான நிலையம் ஆகிய இடங்களில் ஆய்வுப்பணியில் ஈடுபட்டனர். மற்றொரு எஸ்பிஜி குழுவினர் டெல்லியிலிருந்து நீலகிரி மாவட்டம் தெப்பக்காட்டிற்கு சென்று ஆய்வு நடத்தினர்.

அதேபோல் நேற்று மாலை, எஸ்பிஜி வீரர்களின் குழு தலைவரான ஐஜி போகத் தலைமையில் சென்னை பழைய விமான நிலையம் விவிஐபி லாஞ்சில் ஒரு சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகள், சென்னை மாநகர மற்றும் தாம்பரம் மாநகர காவல்துறை உயர் அதிகாரிகள், சென்னை, தாம்பரம் மாநகராட்சிகளின் உயர் அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள், மத்திய மாநில உளவுப் பிரிவு போலீஸ் அதிகாரிகள், முக்கிய பிரமுகர் பாதுகாப்பு அதிகாரிகள், சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகள், க்யூ பிரிவு அதிகாரிகள், ரயில்வே உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் சென்னை வரும் பிரதமருக்கு அளிக்க வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும் பிரதமர் சென்னை விமான நிலையத்தில் இருந்து சென்னை நகருக்குள் ஹெலிகாப்டரில் சென்று வருவது போல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது மோசமான வானிலை நிலவுவதாலும், திடீர் மழை, காற்று இருப்பதாலும்- ஹெலிகாப்டர் பயணத்துக்கு மாற்றாக சாலையில் காரில் சென்று வருவதற்கான மாற்று ஏற்பாட்டையும் தயார் நிலையில் வைத்திருக்கும்படி எஸ்பிஜி ஐஜி உத்தரவிட்டார். பிரதமரின் கார் சாலையில் செல்லும்போது எந்தவிதமான இடையூறும் இல்லாமல் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருக்கும்படி, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

இதற்கு இடையே பாஜகவின் கூட்டணி கட்சியான, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் தனித்தனியே பிரதமரை சந்தித்து பேச அனுமதி கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அது பற்றி டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரை வரவேற்க விமான நிலையத்தில் வரிசையாக நிற்பவர்களின் பட்டியலில் ஈபிஎஸ், ஓபிஎஸ் பெயர்கள் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஆனால், அதிலும் பிரதமருக்கு சென்னை விமான நிலையத்தில் வரவேற்பு கொடுப்பதற்கு ஐந்து நிமிடம் நேரம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதால், அப்போது அவர் யாரிடமும் பேசுவதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சென்னையில் புதிதாக 6 மகளிர் காவல் நிலையம்: நீங்க எந்த எல்லைக்குள்ள வரீங்க?

ABOUT THE AUTHOR

...view details