தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரதமர் மோடி வருகை - சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு - 22 ஆயிரம் போலீசார் குவிப்பு! - சென்னை மாவட்ட செய்திகள்’

pm modi tamil nadu visit: தமிழ்நாட்டிற்கு 3 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி நாளை வருகிறார். இதனையடுத்து சென்னையில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

pm modi
பிரதமர் மோடி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 18, 2024, 7:46 PM IST

சென்னை:பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் பயணமாக நாளை(ஜன. 19) சென்னை வருகிறார். நேரு வெளிப்புற விளையாட்டு அரங்கில் நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, தொடர்ந்து ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்கிறார்.

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு சென்னையில் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். நாளை (ஜன.19) மாலை 4 மணிக்கு பெங்களூரில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மாலை 4.50 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வருகிறார். அங்கு பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதன் பின்னர் நேரு விளையாட்டு அரங்கிற்கு செல்லும் பிரதமர் அங்கு கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியைத் தொடங்கி வைத்து அந்த விழாவில் கலந்து கொண்டு பேசுகிறார்.

அதன்பின்பு மறுநாள் (ஜன. 20) காலை 9:25 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து திருச்சிக்குப் புறப்பட்டுச் செல்கிறார். அங்கு ஸ்ரீரங்கம் கோயில், ராமேஸ்வரம் கோயில் ஆகியவற்றில் வழிபாடுகள் நடத்திவிட்டு 21ஆம் தேதி ஞாயிறு அன்று மதுரையில் இருந்து தனி விமானத்தில் டெல்லி திரும்புகிறார்.

பிரதமர் சென்னை வருகையை ஒட்டி, 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ள சுரங்க பிரிவு, கொரியர் பிரிவுகளுக்கு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. மேலும் விமான நிலைய வளாகத்திற்குள் ஓடுபாதை பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு, தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்கள் வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

மேலும், நிரந்தர பணியாளர்கள் மட்டுமே அடையாள அட்டைகளை வெளியில் தெரியும்படி தொங்க விட்டுக் கொண்டு பணிக்கு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதோடு கூடுதலாக வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் சோதனைகளில் ஈடுபடுகின்றனர். விமான நிலையத்திற்குள் வரும் வாகனங்களில் சந்தேகப்பட்ட வாகனங்களை, நிறுத்தி சோதனை இடுகின்றனர்.

மேலும் கூடுதலாக ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கு இடையே பிரதமருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த பாதுகாப்பு ஒத்திகை அணிவகுப்பு, இன்று மாலை 4.30 மணிக்கு, சென்னை பழைய விமான நிலையத்தில் தொடங்கி, ஐஎன்எஸ் அடையார், நேரு விளையாட்டு அரங்கம், அதன் பின்பு கிண்டி ஆளுநர் மாளிகை வரை நடைபெற்றது.

இந்த 5 அடுக்கு பாதுகாப்பு முறை, பிரதமர் சென்னையில் இருந்து, திருச்சி புறப்பட்டு செல்லும், 20ஆம் தேதி சனிக்கிழமை வரை, அமலில் இருக்கும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது மேலும் பிரதமர் மோடி வருகையையொட்டி, சென்னையில் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

சென்னையில் உள்ள தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்களில் சோதனை, முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் தீவிர வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்களிலும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கத் தடை செய்து மாநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மீறி ட்ரோன் பறக்க விட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:ஆதார் வைச்சு இனி இந்த வேலைகள முடிக்க முடியாது? போச்சுடா!

ABOUT THE AUTHOR

...view details