சென்னை: தமிழ்நாடு அரசின் 2022-23ஆம் ஆண்டிற்கான வேளாண்மை, உழவர் நலத்துறைக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர், "தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ட்ரோன் கழகத்துடன் இணைந்து ஏழு உழவர் பயிற்சி நிலையங்களில் ட்ரோன்கள் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல், பயிர்வளர்ச்சி நிலை கண்டறிதல் குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சியளிக்கப்படும் என்றார்.
வேளாண்மையை இயந்திரமயமாக்குதல்
மேலும், வேளாண்மையில் ஈடுபடும் ஆள் பற்றாக்குறையைக் கருவிகள் கொண்டே நிரப்ப வேண்டிய நிலைமை நீடிக்கிறது. அறுப்பதற்கும், நடுவதற்கும், களையெடுப்பதற்கும், களமடிப்பதற்கும், கனி பறிப்பதற்கும் கருவிகள் வந்து விட்டன. உழவுத் துறையை இயந்திரமயமாக்குதல் தவிர்க்க முடியாத ஒன்று இன்று. விவசாயிகள் தங்களுக்குத் தேவைப்படும் வேளாண் இயந்திரங்கள், கருவிகளை மானியத்தில் பெற்று, நிகர வருவாயை அதிகரிக்க, 2022-23 ஆம் ஆண்டில் 6,357 தனிப்பட்ட விவசாயிகளுக்கு அளிக்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் சிறிய வேளாண் இயந்திரங்கள், கருவிகளுக்கும், சிறு, குறு விவசாயிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். மேலும், இளைஞர்களை விவசாய தொழிலில் ஈர்த்திட, விவசாயிகள், தொழில் முனைவோர், பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம் கிராம, வட்டார அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும். இவற்றில் கரும்பு சாகுபடிக்கேற்ற உயர்தொழில்நுட்ப வேளாண் இயந்திரங்கள், ட்ரோன்கள் உள்ளடங்கிய வாடகை மையங்கள் ஏற்படுத்தப்படும்.