சென்னை: தமிழ்நாடு சட்டசபை மூன்றாவது நாள் கூட்டத்தொடர் நேற்று (அக்.11) காலை வினாக்கள் - விடையுடன் தொடங்கி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பல்வேறு குழுக்களின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. சட்டப்பேரவையில் 3 சட்டமுன்வடிவுகள் அறிமுகம் செய்யப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் திருத்தச் சட்டமுன்வடிவை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிமுகம் செய்தார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் புதிதாக மயிலாடுதுறை மாவட்டத்தை இணைப்பது தொடர்பாகவும் முடிவுகள் கொண்டு வரப்பட்டது.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்:ஷெல் எரிவாயு, ஹைட்ரோ கார்பன் வாயுக்களின் ஆய்வுகள், விவசாயம் அல்லாத பணிகளுக்காக துளையிடுதல் மற்றும் பிரித்தெடுத்தலுக்கும் இனி அனுமதியில்லை. பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலப் பகுதிகளில் கப்பல் உடைக்கும் தொழிற்சாலைகள் அமைக்க முடியாது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் விவசாயம் அல்லாத தொழில் சார்ந்த புதிய திட்டங்களுக்கு இனி அனுமதி அளிக்கப்படாது.
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் முழுவதும் பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலத்தில் இடம் பெறுகின்றன. கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில், மேல்புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, குமராட்சி வட்டாரங்கள் சிறப்பு மண்டலத்திற்குள் உள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, திருவரங்குளம், கறம்பக்குடி வட்டாரங்களும் வேளாண் சிறப்பு மண்டலத்திற்குள் வருகின்றன.
புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சேர்த்துக் கொள்வதற்கும், இந்தச் சட்டத்தில் வரையறுக்கப்பட்ட "வேளாண்மை" என்னும் சொல்லின் வரம்பிற்குள் கால்நடை பராமரிப்பு மற்றும் உள்நாட்டு மீன்வளம் என்பதை சேர்த்துக் கொள்ளப்படுகிறது.
நீர் வளத்துறை அமைச்சர், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர், நீர்வளத் துறையின் பொறுப்பில் கொண்டுள்ள அரசு செயலாளர் மற்றும் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையை பொறுப்பில் கொண்டுள்ள அரசு செயலாளர் ஆகியோரை அதிகார அமைப்பின் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்வதற்கும் முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றார்.
இதையும் படிங்க:முதலமைச்சரை அவதூறாகப் பேசிய அதிமுக மாஜி எம்எல்ஏ மீது வழக்கு.. மன்னிப்புக் கேட்டதால் ஜாமீன் வழங்கிய நீதிபதி!