சென்னை:வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முன்னதாக அவர் மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் பட்ஜெட் உரையை வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய சட்டபேரவை வந்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தோளில் பச்சைத் துண்டு அணிந்து விவசாயி போல காட்சியளித்தார்.
பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கிய அவர் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார், அதன்படி, தமிழகத்தில் தற்போது சாகுபடி பரப்பு அதிகரித்து 63 லட்சத்து 43 ஆயிரம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது என்றார். மேலும் 2 ஆண்டுகளில் 1.50 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கபட்டுள்ளன என்றும் சந்தனம் தேக்கு உள்ளிட்ட 77 லட்சம் மரக்கன்றுகள் 33 ஆயிரம் சதுர பரப்பளவில் நடப்பட்டுள்ளது எனவும் பெருமிதம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், வரும் நிதி ஆண்டில் 127 மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும் 2,504 கிராம பஞ்சாயத்துகளில் தென்னை மரம் இல்லாத 300 வீடுகளுக்கு இரண்டு மரக்கன்றுகள் வீதம் 15 லட்சம் தென்னை மரக்கன்றுகள் வழங்கப்படும் எனவும் கூறினார்.
மேலும், கேழ்வரகு, கம்பு ஆகிய சிறுதானியங்கள் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு ரேஷன் கடைகளில் வழங்கப்படும். நாமக்கல், திருப்பூர், ஈரோடு, புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்கள் புதிதாக சிறுதானிய மண்டலங்களில் இணைக்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
மேலும், தருமபுரி, நீலகிரி மாவட்டங்களில் ரேஷன் அட்டை தாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்கப்படும். ரசாயன பயன்பாட்டை குறைத்து இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க 32 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பருவத்திற்கேற்ற பயிர், தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்வதற்காக 25 முதல் 50 விவசாயிகளை ஒருங்கிணைத்து கிராம முன்னேற்ற குழு அமைக்கப்படும் என அறிவித்தார்.
தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் ரகங்களான தூய மல்லி, சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, கிச்சிலி சம்பா, தங்க சம்பா, கீர சம்பா ஆகியவைகளை பாதுகாத்து பரவலாக்கிட கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் நெல் ஜெயராமன் மரபு சார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் வழங்கப்படும். அதற்காக ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய அளவிலான பாரம்பரிய ரக நெல் விதைகளை விதை வங்கியில் பராமரித்து வரும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக 10 விவசாயிகளுக்கு தலா 3 லட்ச ரூபாய் வழங்கும் வகையில் ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறு தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் 1 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மாற்று பயிர் சாகுபடிக்காக ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும், 60,000 சிறு, குறு, நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு ரூ.15 கோடியில் வேளாண் கருவிகள் தொகுப்பு விநியோகிக்கப்படும் என்றார்.
மேலும், ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உற்பத்தியை பெருக்க ரூ.82 கோடி நிதி ஒதுக்கப்படும். சிறப்பாக செயல்படும் அங்கக விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் மற்றும் நம்மாழ்வார் விருது வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்தார். சிறுதானிய உற்பத்திய பெருக்கும் வகையில் ரூ.82 கோடியில் சிறுதானிய திருவிழா நடத்தப்படும் என்றும், தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, திருப்பூர், அரியலூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கி முருங்கை ஏற்றுமதி மண்டலத்தில் சாகுபடியினை உயர்த்த ரூ.11 கோடி ஒதுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
மேலும், இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்பீடுகளைத் தவிர்க்கும் வகையில் காப்பீட்டுக் கட்டண மானியத்தில் மாநில அரசின் பங்களிப்பாக, 2,337 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார். அரியலூர், கடலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சேலம், தென்காசி, தேனி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மாவட்டங்களில் 2,500 ஹெக்டேர் பரப்பளவில் பலா சாகுபடி செய்ய பலா இயக்கத்திற்கு ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார்.