சென்னை: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் சமயமூர்த்தி, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், வேளாண் தனி நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து பத்திரிகையாளர்களுக்கு விளக்கமளித்தார்.
அப்போது பேசிய அவர், "வேளாண் நிதிநிலை அறிக்கையில் மிளகாய், மல்லி, சிறு தானியங்கள் இயக்கம், கறிவேப்பிலை, முருங்கை உள்ளிட்ட திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. டெல்டா பகுதிகளில் உற்பத்தியாகும் வேளாண் சார்ந்த தொழில்களில் வரக்கூடிய பொருள்களுக்கு மதிப்புக்கூட்டி அங்கே விற்பனை செய்யவோ அல்லது ஏற்றுமதி செய்யும் வகையிலோ கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட வேளாண் பொருட்கள் உண்மையானவையா? எனக் கண்டறிவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூதாதையர்கள் பெயர்களில் பட்டா இருந்து தற்போது விவசாயம் செய்து வரும் வாரிசு விவசாயிகளை நெறிமுறைப் படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வழங்குவதால், வாரிசு விவசாயிகளுக்கு அரசின் திட்டங்களை வழங்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. மேலும் 10 ஏக்கர் தொகுப்பாக உள்ள தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கு விவசாயிகளுடைய ஒத்துழைப்பும், பங்களிப்பும் இருந்தால்தான் இந்த திட்டத்தை செய்ய முடியும்.