இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி இன்று (செப் 17) மின்சார வாரியத் தலைமை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் விவசாய மின் இணைப்பு வழங்குவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைப்படி, நடப்பாண்டில் தட்கல் முறையில் விவசாய மின் இணைப்பு வழங்குவதற்கான கீழ்காணும் அறிவிப்பினை அமைச்சர் தங்கமணி வெளியிட்டார்.
விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்போர் பட்டியலிலுள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விவசாய மின் இணைப்பு பெரும் வகையில் விரைவு (தட்கல்) மின் இணைப்பு வழங்கும் திட்டம் இந்த ஆண்டும் சட்டப்பேரவையில் அறிவித்தபடி நடைமுறைப்படுத்தப்படும்.
இத்திட்டத்தின் மூலம் ஐந்து குதிரைத்திறனுள்ள மின் மோட்டார்களுக்கு இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய், 7.5 குதிரைத்திறனுள்ள மின் மோட்டார்களுக்கு இரண்டு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் ரூபாய், 10 குதிரைத்திறனுள்ள மின் மோட்டார்களுக்கு மூன்று லட்சம் மற்றும் 15 குதிரைத்திறனுள்ள மின் மோட்டார்களுக்கு நான்கு லட்சம் வீதம், ஒரு முறை கட்டணம் செலுத்தும் 25 ஆயிரம் விண்ணப்பதாரர்களுக்கு இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படும்.