சென்னை:சென்னை மாநகரில் உள்ள 16 தண்ணீர் நிரப்பும் நிலையங்களில், 5 மட்டுமே கடந்த இரண்டு மாதங்களாக இயங்கின. இதனால் ஒவ்வொரு மண்டலத்திலும், குடிநீர் லாரிகளுக்கு போதிய தண்ணீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஒவ்வொரு லாரிக்கும் ஒதுக்கப்பட்ட ஆறு அல்லது ஏழு முறை (trip) சென்று தண்ணீர் எடுத்து வர முடியவில்லை. வள்ளுவர் கோட்டம் சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரிய குடிநீர் நிலையத்தில் தண்ணீர் நிரப்ப லாரிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படுவதாக ஒப்பந்ததாரர்கள் தரப்பில் புகார் எழுந்தது.
உரிய இடங்களுக்கு குறித்த நேரத்தில் தண்ணீர் கொண்டு செல்ல முடியவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கப்படாததால், 50 லாரிகளின் ஒப்பந்ததாரர்கள் நேற்று (ஜூன் 1) வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்தனர்.
இந்த நிலையில், லாரி ஒப்பந்ததாரர்களுடன், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக, தண்ணீர் லாரி ஒப்பந்ததாரர்கள் அறிவித்தனர். இது குறித்து சென்னை பெருநகர நீர் வழங்கல் லாரி ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் தலைவர் பி.எஸ்.சுந்தரம் கூறுகையில், ”நீர் நிரப்பும் நிலையங்களை மூடியதால் கடந்த நான்கு மாதங்களாக லாரி ஒப்பந்ததாரர்கள் கடுமையான இடையூறுகளை சந்தித்து வந்தனர்.
வழக்கமாக 8 முறையை முடிக்காமல், மூன்று அல்லது நான்கு முறை மட்டுமே லாரிகள் இயக்கப்பட்டன. மேலும் தண்ணீர் விநியோகத்தில் தாமதமும், சிரமமும் ஏற்பட்டது. மூடப்பட்ட நிரப்பு நிலையத்தை மீண்டும் திறக்குமாறு டேங்கர் லாரி ஒப்பந்ததாரர்கள் சங்கம், சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்திடம் பலமுறை முறையிட்டும் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.
தற்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில், நீர் நிரப்பும் இடத்தை மீண்டும் திறக்க சென்னை குடிநீர் வழங்கல் அதிகாரிகள் ஒப்புக் கொண்டதை தொடர்ந்து வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது” என்றார். தொடர்ந்து சங்கத்தின் செயலாளர் கேசவராம் பேசுகையில், "சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் தாமதமாக பணம் செலுத்துகிறது.
ஒப்புக் கொள்ளப்பட்ட விதிமுறைகளின்படி, குடிநீர் வழங்கல் வாரியம் 15 நாட்களுக்குள் பணம் செலுத்த வேண்டும். இருப்பினும், குடிநீர் வழங்கல் வாரியம் இந்த காலவரிசையை தொடர்ந்து மீறுகிறது” என குறிப்பிட்டார். மேலும், இது குறித்து சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், "லாரி ஒப்பந்ததாரர்கள் எந்தவித சிரமமும் இன்றி தங்களது லாரிகளில் நீர் நிரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதே போல ஒப்பந்ததாரர்களுக்கு வாடகை தடங்கலின்றி கொடுக்கப்படும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'ஆடல் பாடல் நிகழ்ச்சிகளா..இரவு 10 மணிக்கு மேல் அனுமதியில்லை' - டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு