சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் வரிசை எண் 311இல் 'சம வேலைக்கு சம ஊதியம்' வேண்டும் என்ற வாக்குறுதியை அறிவித்து, தற்போது வரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றாததை கண்டித்து இடைநிலை ஆசிரியர்கள் 20,000 ஆயிரம் பேர் கடந்த 28ஆம் தேதி முதல் தொடர்ந்து 9 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
போராட்டம் நடத்தியவர்கள் நேற்று காலையில் கைது செய்யப்பட்டு நேற்று இரவு 9 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர். பிறகு மீண்டும் நேற்று இரவு 10:30 மணி அளவில் டிபிஐ வளத்தை முற்றுகையிட முயன்ற ஆசிரியர்களை அரசு பேருந்துகளில் ஏற்றி வெவ்வேறு மாவட்டங்களுக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
ஆனாலும் தலைமை நிர்வாகிகள் தெரிவிக்கும் வரையில் எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கு போகாமலும், பள்ளிக்கு செல்லாமலும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து இடைநிலை பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்களை ஐந்தாவது முறையாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் சுமார் 20 நிமிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு இடைநிலை ஆசிரியர்கள் தங்களுடைய போராட்டத்தை முடித்துக் கொள்வதாக தெரிவித்தனர். மேலும் மாணவர்களின் நலன் கருதி தாங்கள் பள்ளிக்கு திரும்புவதாகவும், அரசின் மீது நம்பிக்கை உள்ளது. மூன்று மாத காலத்திற்குள் நிச்சயமாக தமிழ்நாடு முதலமைச்சர் உரிய முடிவெடுப்பார் என்ற நம்பிக்கையோடு இந்த போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்கு செல்வதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
”இந்தப் போராட்டத்தை கைவிடக் கோரி அரசு சார்பில் யாரும் எங்களை மிரட்டவும், அச்சுறுத்தவும் இல்லை ஆசிரியர்கள் இன்று முதல் பணிக்கு திரும்புகிறோம். இடைநிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்று வரும் நிலையில், அந்த பயிற்சியில் பங்கேற்று அரசுக்கு நற்பெயர் ஏற்படுத்தும் வகையில் அந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவோம்” என இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொருளாளர் கண்ணன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: காலாண்டு விடுமுறை முடிந்தும் பள்ளிக்குச் செல்ல மாட்டோம் - இடைநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு!