தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அக்னிபாத் திட்டம்: அக்னி வீரர் பணிக்கு சேர்வது எப்படி ? எவ்வளவு சம்பளம் ? சலுகைகள் என்ன ? - Centre announces defence recruitment scheme Agnipath for armed forces

அக்னிபாத் (ராணுவத்தில் குறுகிய கால பணி வாய்ப்பு ) என்ற திட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. 4 ஆண்டுகள் பணியின் போது ஒரு அக்னி வீரருக்கு மத்திய அரசும் கொடுக்கும் சம்பளம் மற்றும் சலுகைகள் என்ன என்பது குறித்து லெப்டினன்ட் ஜெனரல் ஏ.அருண் விளக்கியுள்ளார்.

agnipath-project-how-to-join-in-work-and-how-much-salary அக்னி பாத் திட்டம்: அக்னி வீரர் பணிக்கு சேர்வது எப்படி ? எவ்வளவு சம்பளம் ? சலுகைகள் என்ன ??
agnipath-project-how-to-join-in-work-and-how-much-salary அக்னி பாத் திட்டம்: அக்னி வீரர் பணிக்கு சேர்வது எப்படி ? எவ்வளவு சம்பளம் ? சலுகைகள் என்ன ??

By

Published : Jun 16, 2022, 12:27 PM IST

சென்னை: அக்னிபாத் என்ற திட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய இந்திய பாதுகாப்புப் பிரிவை இளைஞர்களால் நிரப்பும் திட்டம் இதுவாகும். அதன்படி ’அக்னி வீரர்’ என்ற ஒரு பணி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னையில் லெப்டினன்ட் ஜெனரல் ஏ.அருண் நேற்று (ஜூன்.15) செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "அக்னிபாத் என்ற திட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. அதன்படி ’அக்னி வீரர்’ என்ற ஒரு பணி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், அதாவது 17 1/2 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்தப் பணிக்கு சேரலாம்.

லெப்டினண்ட் ஜெனரல் ஏ.அருண் பேட்டி

அவர்களுக்கு முதல் 6 மாதங்கள் அடிப்படை பயிற்சி அளிக்கப்படும். அதன் பின்னர் அவர்கள் ஒரு சிப்பாய்க்கு இணையான பணியில் அமர்த்தப்படுவார்கள். இருப்பினும் அக்னி வீரர் பணியில் சேர்ந்தவர்களைச் சிப்பாய்கள் என்று அழைக்க முடியாது. அந்தப் பணியில் 4 ஆண்டுகள் மட்டுமே பணியாற்ற முடியும். இந்த பணிக்கான அறிவிப்பாணை இன்னும் சில வாரங்களில் வெளியாகும்.

ஆட்கள் தேர்வில் பழைய முறை பின்பற்றப்படும். சம்பளம், பங்களிப்பு 4 ஆண்டுகள் பணியின்போது ஒரு அக்னி வீரருக்கு முதல் ஆண்டு சம்பளமாக ரூ 4.76 லட்சம் (மாதம் ரூ.30 ஆயிரம் வீதம்) வழங்கப்படும். அதில் மாதம் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு அவரின் பெயரில் சேமிக்கப்படும். அதே அளவிலான தொகையை மத்திய அரசும் கொடுக்கும்.

அக்னி பாத் திட்டம்: அக்னி வீரர் பணி

4ஆவது ஆண்டில் சம்பளம் ரூ 6.92 லட்சமாக உயர்த்தப்படும். சம்பளம் மாதமொன்றுக்கு ரூ.40 ஆயிரம் கிடைக்கும். மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் தொகை மற்றும் மத்திய அரசின் பங்களிப்புத் தொகை ஆகியவை 4 ஆண்டுகளில் ரூ 11.71 லட்சம் வரை சேவா நிதி சேர்ந்திருக்கும். அக்னி வீரருக்கு உணவு, உடை, தங்கும் இடம் என எந்தவொரு செலவும் இருக்காது.

எனவே அவர்கள் பெறும் சம்பளத்தில் பெருமளவைச் சேமித்துக் கொள்ளலாம். மேலும் ஒரு ஆண்டில் 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும். 4 ஆண்டுகளை முடித்த அக்னி வீரர்களில் 25 சதவீதம் பேர் மட்டும் அவர்களின் திறமை மிக்க பணிக்கு ஏற்ப சிப்பாயாக நிரந்தர பணிக்கு எடுத்துக் கொள்ளப்படுவார்கள். மற்ற 75 சதவீதம் பேர் வெளியேற்றப்படுவார்கள்.

அவர்கள் வெளியே சென்று புது வாழ்க்கையைத் தொடங்கலாம். அப்போது அவர்களின் கையில் ரூ 11.71 லட்சம் சேவா நிதி இருக்கும். சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை படிப்படியாகச் சேர்த்திருந்தால் சுமார் ரூ 20 லட்சம் வரை அவர்கள் கையில் இருக்கும். மேலும், அக்னி வீரர் பணியில் இருக்கும் போதே அவர்கள் தொலைதூரக் கல்வி மூலம் படிக்கலாம்.

4 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியில் வந்த பிறகும் அவர்கள் கல்வியைத் தொடர்ந்து படித்து வேலைக்குச் செல்லலாம். ராணுவத்தில் இருக்கும்போதும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு திறம் மேம்பாடு பெற்றிருப்பார்கள். அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்படும். எனவே வெளியில் சிறு தொழில்களையும் தொடங்கி நடத்தலாம்.

அக்னி பாத் திட்டம்: அக்னி வீரர் பணிக்கு சேர்வது எப்படி ? எவ்வளவு சம்பளம் ? சலுகைகள் என்ன ??

அதற்கு வங்கிக் கடன் வசதிகளும் உண்டு. ராணுவ கட்டுப்பாடுகளையும் ஒழுக்கத்தையும் கற்று வெளியேறும் அக்னி வீரர்கள் நல்ல முறையில் சிவில் வாழ்க்கையை தொடரலாம். முன்னாள் ராணுவத்தினருக்கான சலுகைகளை அவர்கள் பெற முடியாது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேறுகிறவர்களை மத்திய துணை ராணுவப் படையில் சேர்க்க முன்னுரிமை வழங்கலாமா? என்ற கருத்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

சில மாநிலங்களில் அவர்களை போலீஸ் பணிக்கு சேர்க்க முன்னுரிமை அளிப்போம் என்று அந்த மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.
அக்னி வீரர் பணியில், ரூ 48 லட்சத்துக்கான (இறந்தால்) ஆயுள் காப்பீடு திட்டத்தில் இருப்பார்கள். அவர்களின் சேவையை கருத்தில் கொண்டு குடும்பத்தினருக்குக் கூடுதலாக ரூ 44 லட்சம் கருணைத் தொகையும் சேர்த்து (சுமார் ரூ 1 கோடி) வழங்கப்படும்.

4 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து போனால், மீதமுள்ள மாதங்களுக்கான சம்பளமும், சேவா நிதியும் சேர்த்து வழங்கப்படும்.
அக்னி வீரர் பணியின் போது ஊனமடைந்து விட்டால் அதற்கேற்ப இழப்பீடு வழங்கப்படும். 100 சதவீத ஊனம் என்றால் ரூ 44 லட்சமும், 75 சதவீத ஊனம் என்றால் ரூ 25 லட்சமும், 50 சதவீத ஊனம் என்றால் ரூ 15 லட்சமும் கருணைத் தொகையாக வழங்கப்படும்.

இளைஞர்களால் நிரப்பும் திட்டம்:17 1/2 வயதிலேயே அவர்களை வேலைக்கு சேர்க்கலாமா? குழந்தைத் தொழிலாளர் நலச் சட்டத்திற்கு எதிரானதாக இருக்குமே? என்று கேட்டால், முதல் 6 மாதங்களில் அவர்கள் பயிற்சியில் தான் இருப்பார்கள் என்பதால் குழந்தை தொழிலாளர் என்று எடுத்துக்கொள்ள முடியாது. பெண்களும் அக்னி வீரர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ஆனால் குறிப்பிட்ட பிரிவுக்கு மட்டுமே அவர்கள் எடுத்துக் கொள்ளப்படுவார்கள். அக்னி வீரர் பணி என்பது ராணுவத்தை தனியார் மயமாக்கும் முயற்சி என்ற குற்றச்சாட்டை மறுக்கிறேன். சில நாடுகளில், அனைவருமே ராணுவத்தில் குறிப்பிட்ட நாட்கள் பணியாற்றி இருக்க வேண்டும் என்ற கட்டாயமாக இதை கருதக் கூடாது. அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இது சாத்தியமற்றது.

மேலும், மக்களில் அதிகம் பேருக்கு ராணுவப் பயிற்சி வழங்குவதும் தவறு. அக்னி வீரர் பணி என்பது ராணுவத்தில் இளம் ரத்தம் பாய்ச்சும் முயற்சியாகும். இந்திய ராணுவத்தை இளைஞர்களால் நிரப்பும் நோக்கத்தில் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி இன்னும் 11 ஆண்டுகளில் இந்திய ராணுவத்தில் சிப்பாய்கள் அனைவருமே இளைஞர்களாக இருப்பார்கள்" இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: நான்கு வருட வேலை; ரூ.11 லட்சம் செட்டில்மென்ட் - ஆர்மியில் அசத்தலான பணிவாய்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details