சென்னை: தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் கடந்த மே மாதம் (மே 4 ) தொடங்கி நாளையுடன் நிறைவடைகிறது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகமாகவே இருக்கும் என தனியார் வானிலை ஆய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடி மின்னலுடன் கூடிய மழை:மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது எனவும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. “நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வரும் 31 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
38 டிகிரி முதல் 40 டிகிரி வரை அதிகரிக்கலாம்: நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களை பொறுத்த வரையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது. "ஜூன் 1 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலையாக இன்று முதல் முதல் நாளை மறுநாள் வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.