சென்னை:நடிகர் சிவகுமாரின் ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 44-வது விருது வழங்கும் விழா சென்னை வடபழனியில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி மற்றும் சிவகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள 5 மாற்றுத்திறனாளி மாணவர்கள், 2 ஈழத்தமிழர் மாணவர்கள், பெற்றோர்களை இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்த மாணவர்கள் என 25 அரசுப்பள்ளி 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் சார்பில் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தலா ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
விழாவில் நடிகர் கார்த்தி மேடையில் பேசும்போது, ''இந்த காலகட்டம் முக்கியமானது. அனைவரும் படிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். கஷ்டப்படும் குடும்பத்தில் பிறந்து தன் மாமாவின் உதவியால் படித்து உயர்ந்தவர், என் அப்பா. ஒருவன் படித்து விட்டால், அவன் தலைமுறையே செழிக்கும் அதற்கு நாங்களே சாட்சி.
அகரம் விருது வழங்கும் விழா 44ஆவது வருடத்தில் வந்து நிற்கிறது, அதுவே மகிழ்ச்சி. கிராமப்புறத்தில் இருந்து படித்து ஒருவன் 50 மதிப்பெண்கள் வாங்குவதற்கும் சென்னையில் படித்து ஒருவன் 100 மதிப்பெண்கள் வாங்குவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. தன்னம்பிக்கையை எப்போதும் கொண்டிருங்கள். எல்லோராலும் முடியும். தமிழ் மீது அகரம் மாணவ மாணவிகளுக்கு ஆர்வம் அதிகம். இவ்விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி'' என்றார்.
இதைத் தொடர்ந்து, நடிகர் சிவகுமார் மேடையில் பேசுகையில், ''இந்த குழந்தையின் கதைகளைக் கேட்கும் போது நெஞ்சு அடைக்கிறது. என்னுடைய வாழ்க்கையும் கிட்டத்தட்ட உங்கள் நிலைமைதான். என் அம்மா அப்போதே அரளி கொட்டையை அரைத்து கொடுத்திருந்தால் 1941-லேயே சென்றிருப்பேன். அவள் செய்யவில்லை. இப்போது இங்கு நிற்கிறேன். தீபாவளி போன்ற பண்டிகை கொண்டாடியது கிடையாது. அப்போது நாங்கள் படிப்பதற்கு கட்டணம் தான். 750 ரூபாய் கட்டி முழு படிப்பையும் முடித்தேன். ஆனால், இப்போது அப்படி இல்லை. LKG படிப்பதற்கே இப்போது 3 லட்சம் ரூபாய் ஆகிறது.
மேலும், 192 படங்கள் நடித்து விட்டேன். 40 கோடி frame-ல் இருந்த எனது புகைப்படம், அந்த 5 ரூபாய் புகைப்படத்தில் இல்லை. திரும்ப அவர்களை வைத்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த புகைப்படத்தை எடுத்து விட்டேன். 7 ஆண்டுகள் படம் வரைந்தேன். அதை புத்தகமாக எனது மகன்கள் போட்டுள்ளனர். அதுதான் என்னுடைய அடையாளம். நான் ஓவியனாக வாழ்ந்திருந்தால் சத்தியமாக கல்யாணம் செய்திருக்க மாட்டேன்.