ஸ்ரீஹரிகோட்டா:இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் ஜி.எஸ்.எல்.வி-எப் 12 ராக்கெட் ஆனது இந்திய நேரப்படி 10.42 மணிக்கு ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவு தளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட் 51.7 மீட்டர் உயரமும் 420 டன் உந்துவிசை எடையும் கொண்டது. ஜி.எஸ்.எல்.வி. வரிசையில் இது 15வது ராக்கெட் எனபது குறிப்பிடத்தக்கது.
இந்த ராக்கெட்டின் மூலம் என்.வி.எஸ் -01 என்கிற 2232 கிலோ எடை கொண்ட வழிகாட்டும்(navigation) வகை செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள் இரண்டாம் தலைமுறை தொழில்நுட்பம் கொண்ட நேவிகேஷன் செயற்கைக்கோளாகும். இதன் மூலம் இந்தியா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பயனர்களுக்கு நிலை, வேகம், இடம் மற்றும் நேரத் தகவலை துல்லியமாக வழங்க முடியும் என கூறப்படுகிறது.
இந்த செயற்கைக்கோள் மூலம் நிலத்திலும் கடற்பரப்பிலும் பயணிக்கும் இடத்தையும் தொலைவையும் மிகவும் துல்லியமாக கணிக்க முடியும் என கூறப்படுகிறது. மேலும் இந்திய எல்லைக்கு அப்பால் 1500 கிலோமீட்டர் வரை கண்காணிக்க முடியும் என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மீனவர்கள் கடலுக்குள் எல்லைப்பகுதியை அறிந்துகொள்ளவும், அதேபோல் விவசாயிகளுக்கு நிலத்தின் தன்மையை அறிவதிலும் உதவும். இந்த தொடர் சேவைகளை விரிவுபடுத்த கூடுதலாக L1 பேண்ட் சிக்னல்களை உள்ளடக்கியுள்ளது.
முதன்முறையாக, உள்நாட்டு அணுக் கடிகாரம் என்விஎஸ்-01ல் பறக்கவிடப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு புவிநிலைச் சுற்றுப்பாதையில் 18 நிமிடங்கள் 37 நொடிகளில் சென்று சேர்ந்தது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், “என்.வி.எஸ் -01 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. மேலும் இதே போன்று நான்கு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படும். கடைசியாக ராக்கெட் ஏவும் போது கிரயோஜினிக் என்ஜினில் பிரச்சனை ஏற்பட்டது.
அது இந்த முறை சரி செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை நடந்த தவறுகளை சரி செய்து உள்ளோம். அதே போல் கடந்த முறை எரிபொருள் சேமிப்பு பகுதியில் தான் சிக்கல், ராக்கெட்டில் இல்லை. இந்த வழிகாட்டுமுறை மிகவும் துல்லியமானது. சந்திராயன் செயற்கை கோள் விண்ணில் ஏவுவது பற்றி விரைவில் அறிவிக்கப்படும். ககன்யான் திட்டத்திற்கு தேவையான பாராசூட், இருக்கை, மற்றும் பயணி அமைப்பு ஆகியவை சோதனை செய்யப்பட்டு வருகிறது. சோதனை வாகன ஏவும் திட்டம் ஜூலை ஆகஸ்டில் செயல்படுத்த உள்ளோம்.