சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, இதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 100 நாட்களுக்கு மேலாக இலாகா இல்லாத அமைச்சராகச் செந்தில் பாலாஜி புழல் சிறையிலிருந்து வந்தார்.
இந்த நிலையில், இன்று காலை காலில் ரத்த ஓட்டம் குறைவாக இருப்பதாகவும், இதனால் அடிக்கடி கால் மரத்துப்போதல் , அதே போல் மூச்சு திணறல் ஏற்படுவதாகச் செந்தில் பாலாஜி சிறைத்துறை மருத்துவரிடம் கூறியதை அடுத்து, சிறை மருத்துவர்கள் பரிந்துரையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டர்.
பின்னர் அவருக்கு இதயம் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, இதயத்தின் செயல்பாடு உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை இருதயவியல் சிறப்பு மருத்துவர் மனோகர் தலைமையில் மருத்துவர் குழு ஸ்டான்லி மருத்துவமனைக்கு வருகை புரிந்து, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவில் அடிப்படையில் அவருக்கு மீண்டும் இதய வலி ஏற்பட்டுள்ளதா அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையா என்று தொடர்ந்து பரிசோதித்தனர்.