சென்னை:பழமை வாய்ந்த டப்பிங் யூனியன் சங்கத்தின் தலைவராக, நடிகர் ராதாரவி பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த டப்பிங் சங்கத்தின் தேர்தலில், ராதாரவி போட்டியின்றி வெற்றி பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில்,கடந்த மார்ச் 11 அன்று சௌத் இந்தியன் சினி, டிவி ஆர்டிஸ்ட்ஸ் மற்றும் டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியன் இயங்கி வந்த அலுவலக கட்டிடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளதாக கூறி சீல் வைத்தனர்.
இந்த நிலையில், டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியன் சட்டரீதியாக எடுத்த நடவடிக்கைகளின் பலனாக, மாநகராட்சி அதிகாரிகள் வந்து, நீதிமன்ற ஆணையின்படி பொருட்களை எடுக்கவும், இடித்துக் கட்டுவதற்கு விண்ணப்பிக்கவும் இரண்டு வாரங்களுக்கு, அதாவது 17-04-2023 வரை அவகாசம் அளித்தது. இதனால், காவல்துறையினர் முன்னிலையில் சீலை உடைத்து, கட்டிடத்தை திறந்தனர். சட்டபூர்வ செயல்பாடுகள் பூர்த்தியானதும் டப்பிங் யூனியன் வசம் இடம் மீண்டும் நிரந்தரமாக ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து டப்பிங் யூனியன் சங்கத்தின் செயலாளர் கதிரவன் கூறியதாவது "கடந்த காலங்களில் டப்பிங் யூனியன் உறுப்பினர்கள் சிலர் செய்த தவறுகளுக்காக அவர்கள் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு சிலர் நீக்கப்பட்டனர். அதில் பி.ஆர்.கண்ணன் என்பவருக்கு மட்டும் நீதிமன்றத்தில் இடைக்காலத்தடை உள்ளதால் அவர் இன்னும் உறுப்பினராக உள்ளார். அவர் நீக்கப்பட்டவர்களோடு இணைந்து கொண்டு இன்னும் சிலரை தூண்டி 2014 முதல் டப்பிங் யூனியனுக்கு எதிராகவும் , அதன் தலைவர் "டத்தோ" ராதாரவிக்கு எதிராகவும் பல வருடங்களாக பல அவதூறுகளை பரப்பி 2018ல் நடந்த தேர்தலில் தாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்று கூறி, தேர்தலில் தோற்றார்கள்.