சென்னை : சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து உள்ளார்.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஆகியவற்றிற்கு இடையே தெளிவில்லாத சுழல் நிலவியது.